மாமன்னரின் மன்னிப்பை மதியுங்கள் அல்லது அமைச்சரவையிலிருந்து வெளியேறுங்கள் டிஏபி அமைச்சர்களுக்கு கைரி வலியுறுத்தல்

நஜிப் ரசாக்கின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு மற்றும் வீட்டுக் காவல் தொடர்பான மாமன்னரின் முடிவை மதிக்க முடியாவிட்டால், டிஏபி அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் அம்னோ இளைஞர் அணித் தலைவர் கைரி ஜமாலுதீன் வலியுறுத்தியுள்ளார்.

கட்சிக்குச் சாதகமாக மாமன்னர் முடிவெடுக்கும் போது மட்டுமே டிஏபி அவரை மதிக்குமா என்று முன்னாள் அமைச்சரான அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவர அப்போதைய மன்னர் எவ்வாறு தலையிட்டார் என்பதையும், அதன் மூலமே ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டு அன்வார் இப்ராகிம் பிரதமராக முடிந்தது என்பதையும் கைரி நினைவுகூர்ந்தார்.

அப்போது, மாமன்னரின் ஆணையைக் கட்டாயம் மதிக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர். எனவே, மாமன்னரின் முடிவுகள் நமக்குச் சாதகமாக இருக்கும்போது மட்டும்தான் அவருக்குரிய மரியாதை பொருந்துமா?” என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

நஜிப்பைப் பாதுகாக்கவோ அல்லது அவரது மன்னிப்புக்கு ஆதரவளிக்கவோ தான் யாரையும் கேட்கவில்லை என்றும், ஆனால் அரசியல் கருத்து வேறுபாடுகள் மாமன்னரை அவமதிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்றும் கைரி தெரிவித்தார்.

நான் கேட்பதெல்லாம் நிலைத்தன்மையை மட்டும்தான். நாம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கிறோம் என்றால், அதை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியை நாம் மதிக்கிறோம் என்றால், ஒரு முடிவால் யார் பயனடைகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அதை மதிக்க வேண்டும்.

நஜிப்பின் வீட்டுக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர மலேசிய வழக்கறிஞர் மன்றம்  எடுத்துள்ள நடவடிக்கையையும் கேள்வி எழுப்பிய கைரி, சட்டத் துறையின் சார்பாகச் செயல்பட அதற்கு யார் அதிகாரம் அளித்தது என்றும் வினவினார்.

நஜிப்பின் வீட்டுக் காவல் குறித்த கேள்விகளை அரண்மனையிடமே நேரடியாகக் கேட்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்த டிஏபி முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவையும் அவர் சாடினார்.

அரசாங்கம் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கும் முடிவு தன்னுடையது மட்டுமே என்பதை மாமன்னர் தெளிவுபடுத்தியுள்ளதாக புவா கூறியிருந்தார்.

இருப்பினும், 2024 டிசம்பர் 10-ஆம் தேதி மக்களவையில் அன்வார் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய கைரி, கூட்டாட்சிப் பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் நஜிப்பின் முந்தைய மன்னிப்பு கோரிக்கையைத் தாமே தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகப் பிரதமர் அப்போது கூறியதை நினைவுபடுத்தினார்.

இதில் அரசாங்கமும் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்பதையும், அதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இது காட்டுவதாக முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கடந்த வாரம் வழங்கப்பட்ட முந்தைய விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, நஜிப்பின் வீட்டுக் காவல் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

நஜிப்பின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு தொடர்பான டிஏபியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே தாம் பதவி விலகுவதாகக் கூறி, லோக் செப்டம்பர் மாதம் தனது ராஜினாமாவை அறிவித்திருந்தார்.

 

 

 

-fmt