காஜாங் வீட்டில் 30 வயதுகளிலுள்ள தம்பதியினர் சடலமாகக் கண்டெடுப்பு

மேல் மாடியின் வெவ்வேறு பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, இவ்வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

சிலாங்கூர், காஜாங், பண்டார் தாசிக் கெசுமாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் 30 வயதுகளில் உள்ள கணவன், மனைவி இருவரும் நேற்று மாலை சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

மாலை சுமார் 6.30 மணியளவில் இது தொடர்பாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து வீட்டின் மேல் மாடியில் வெவ்வேறு இடங்களில் அந்தத் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் காஜாங் மாவட்டக் காவல் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவத்தில் குற்றச் செயல்கள் இடம்பெற்றதற்கான எந்தவோர் அறிகுறியும் கண்டறியப்படவில்லை. இருவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, அவர்களது சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் ஹரியான் மெட்ரோ நாளிதழிடம் தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.