எதிர்பார்க்கப்படும் வெப்பமான காலநிலை மற்றும் எல் நினோ (El Niño) தாக்கங்களைக் குறைப்பதற்கும், நாட்டின் அடிப்படை உணவுப் பொருட்களின் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கும் நீர்த்தேக்கங்களை நிர்வகிப்பது உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது.
வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக, உறைந்த மீன்களைப் பெருமளவில் கையிருப்பில் வைத்திருப்பதும் இதில் அடங்கும் என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் சாபு தெரிவித்தார்.
மீன்வள மேம்பாட்டு ஆணையமும் தனியார் நிறுவனங்களும் இணைந்து, மக்களுக்குத் தேவையான புரத உணவின் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் உறைந்த மீன்களைப் பெருமளவில் சேமித்து வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
“கெடா மாநிலத்தின் பெடு அணையில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். வெப்பமான காலநிலையின்போது மீன்கள் நீர்த்தேக்கத்தின் மையப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். எனவே, பொதுவாக மக்கள் அதிகம் உட்கொள்ளும் மீன் வகைகள் குறிப்பாக, உறைந்த மீன்களைப் பெருமளவில் கையிருப்பில் வைத்திருப்பதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்றார்.
இன்று சிலாங்கூர், கிள்ளான் ஜெயா மண்டபத்தில் இந்தியச் சிறு தொழில்முனைவோருக்கான அக்ரோ ஐ-சினார் (Agro i-Sinar) நிதியுதவித் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
நெல் சாகுபடி தொடர்பாகப் பேசிய மொஹமட், தீவிரமான வானிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்வதற்காக, மூடா விவசாய மேம்பாட்டு ஆணையம், உள்ளூர் சமூகங்கள் மற்றும் அக்ரோ வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து நெல் நடவு கால அட்டவணைகள் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.
மேலும், தேவையான நேரத்தில் முன்னேற்பாடுகளையும் தொடர் நடவடிக்கைகளையும் திறம்பட ஒருங்கிணைப்பதை உறுதிப்படுத்த, அமைச்சும் சம்பந்தப்பட்ட முகமைகளும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இரு அடுக்கு நீதிமுறை நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்து
இதற்கிடையில், மலேசியாவில் இரு அடுக்கு நீதிமுறை உருவாகுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மொஹமட் சாபு வலியுறுத்தினார். அவ்வாறு ஏற்பட்டால் அது நாட்டின் எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறையினரின் நலனையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
சட்டத்தின் ஆட்சி என்பது சர்வதேச அரங்கில் மலேசியாவின் நன்மதிப்புக்கு அடித்தளமாக விளங்கும் முக்கிய அம்சமாகும். எனவே, அனைவரும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.
“நான் எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் குறிப்பிடவில்லை. ஆனால், இரு அடுக்கு நீதிமுறை உருவாகுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன். இது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது. சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் நாடு என்பதாலேயே மலேசியா சர்வதேச அளவில் மதிக்கப்படுகிறது. இதைத்தான் நாம் பாதுகாக்க வேண்டும்,” என்று நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும், ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன்பும் கூட்டரசு அரசியலமைப்பின் கீழும் சம உரிமைகளையும் சம அந்தஸ்தையும் அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதற்கும் மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், மாதந்தோறும் தமக்குக் கிடைக்கும் ரிம 11,900 அமைச்சரவைச் சம்பளத்தை அரசு சாரா அமைப்புகளுக்கு (NGO) நன்கொடையாக வழங்கும் திட்டம் குறித்து கருத்துரைத்த மொஹமட், இதற்காகப் பல தரப்பினர் முன்வந்துள்ளதாகவும், நிதியைப் பகிர்ந்தளிப்பதற்கான வழிமுறையை இறுதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
உண்மையிலேயே உதவி தேவைப்படுவோருக்குத் தமது நன்கொடைகள் வெளிப்படையான முறையில் சென்றடைவதை உறுதிப்படுத்தவே இந்தப் பேச்சுவார்த்தைகள் அவசியமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, சமமான நீதியை வலியுறுத்தும் அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGOs) ஆதரவளிக்கும் வகையில், தனது மாதாந்திர ஊதியத்தை உடனடியாக நன்கொடையாக வழங்கப்போவதாக அமானா கட்சியின் தலைவருமான முகமது நவம்பர் 11-ஆம் தேதி அறிவித்தார்.
























