லோவி நிறுவனம்(Lowy Institute), சர்வதேச அளவில் தங்கள் நாடுகளின் இராஜதந்திர நலன்களை முன்னெடுப்பதில் உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்குத் தரவரிசை வழங்குகிறது.
உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேவேளையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் அப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம், லோவி ஆய்வு நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய வலிமைக் குறியீட்டில் (Asia Power Index), அரசியல் தலைமைத்துவத்தின் செயல்திறன் அடிப்படையில் உலகின் முதல் 10 தலைவர்களில் ஒருவராகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.
உலக அளவில் தங்களது நாடுகளின் இராஜதந்திர நலன்களை முன்னெடுப்பதில் அரசியல் தலைவர்கள் எந்த அளவுக்குச் செயல்திறனுடன் செயல்படுகின்றனர் என்பதை மதிப்பிடும் இந்தக் குறியீட்டின் அண்மைய தரவரிசையில், 46 புள்ளிகளுடன் அன்வார் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனை ஆஸ்திரேலியாவின் ஏபிசி ஆசியா (ABC Asia) தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
பிராந்திய அளவில், உலகின் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற மூன்று ஆசியான் தலைவர்களில் அன்வாரும் ஒருவராவார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் 74 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், வியட்நாம் அதிபர் தோ லாம் 50 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டுக்கான ஆசிய வலிமைக் குறியீட்டின் அரசியல் தலைமைத்துவத் தரவரிசையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் 100க்கு 100 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகளாவிய இராஜதந்திரச் செயல்திறன் அடிப்படையில் அவருக்கு இந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களிலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான லோவி ஆய்வு நிறுவனம் இந்தத் தரவரிசையைத் தொகுத்துள்ளது. உலக அரங்கில் தங்களது நாடுகளின் இராஜதந்திர நலன்களை முன்னெடுப்பதில் அரசியல் தலைவர்கள் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்பதை நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைமைத்துவத் தரவரிசைகள், பிராந்தியம் முழுவதும் உள்ள 27 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் அளவிடும் பரந்த ஆசிய சக்தி குறியீட்டின் (Asia Power Index) ஒரு பகுதியாகும்.
























