16-வது பொதுத் தேர்தலில் மஇகா குறைந்தது ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் அகமது ஜாஹிட் ஹமிடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களில் மஇகா மாநிலத் தொகுதிகளில் வெற்றி பெற உதவிய பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளின் தேர்தல் இயந்திரங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, அக்கட்சி கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற ஏதுவாகத் தொடர வேண்டும்.
மஇகா ஒரு காலத்தில் ஐந்து தொகுதிகளை வைத்திருந்தது போலவே, 16-வது பொதுத் தேர்தலிலும் அக்கட்சி குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன், என்று நடைபெற்ற மஇகாவின் 80-வது ஆண்டுப் பொதுப் பேரவையைத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மசீச தலைவர் வீ கா சியோங், மக்கள் முற்போக்குக் கட்சி தலைவர் ஜே. லோக பால மோகன் மற்றும் ஜொகூர் பாரிசான் நேஷனல் தலைவர் ஓன் ஹாபிஸ் காசி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் மஇகாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அக்கட்சியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதைத் துணைப் பிரதமருமான சாஹிட் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அக்கட்சி போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்காக அதன் தேர்தல் இயந்திரம் காட்டிய அர்ப்பணிப்புக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
15-வது பொதுத் தேர்தலில் (GE15), 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ம.இ.கா, பேராக் மாநிலத்தின் தாப்பா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது; அங்கு அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் 5,064 வாக்குகள் பெரும்பான்மையுடன் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.
16-வது பொதுத் தேர்தலில் மஇகா தலைவர் அம்மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடக்கூடும் என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கும் வகையில், ஜொகூர் மந்திரி பெசாரான ஓன் ஹாபிஸுடன் நல்லுறவைப் பேணுமாறு விக்னேஸ்வரனுக்குச் சாஹிட் அறிவுறுத்தினார்.
டான் ஸ்ரீ விக்கி (விக்னேஸ்வரன்), ஜொகூர் மந்திரி பெசாருடன் நல்லுறவைப் பேணுங்கள். அந்தத் தொகுதி பாதுகாப்பானது என்பது எனக்குத் தெரியும்; அது பாதுகாப்பாக இருந்தால், டான் ஸ்ரீ விக்கியும் பாதுகாப்பாக இருப்பார், என்று அவர் கூறினார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 16-வது பொதுத் தேர்தலில் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் விக்னேஸ்வரன் போட்டியிடுவாரா எனக் கேட்கப்பட்டதற்கு, “நேரம் வரும்போது, நான் வேட்பாளர் நியமனக் கடிதத்தில் கையெழுத்திடுவேன், என்று ஜாஹிட் பதிலளித்தார்.
-fmt
























