சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க தினசரி ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது குறித்த ரஷ்யாவின் பிரேரணைகளை விவாதிக்க, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாஃபராவை ஜெனீவாவில் இன்று சந்தித்து பேசவுள்ள நிலையில், புடினின் கட்டுரை வெளியாகியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், உலகெங்கும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அமெரிக்காவை ஒரு முன்மாதிரி ஜனநாயகமாகப் பார்க்காமல், மூர்க்கமான பலத்தை நம்பியுள்ள ஒரு நாடாகவே பார்க்கின்றனர் என்று புடின் எழுதியுள்ளார்.
செல்வக்குள்ள நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை மீறி நடவடிக்கை எடுக்குமானால், ஐ நா என்கிற அமைப்பே அதன் முந்தைய வடிவமான லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு போல குலைந்துவிடும் என்றும் புடின் எச்சரித்துள்ளார். -BBC