சுற்றுச் சூழல் மாசுபாட்டால், பூமியின் வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்க்டிக் கடல் பகுதிகளில், கடல் நீர் உறைந்து, அங்குள்ள பனிப்பாறைகளின் அளவு கடந்த ஓராண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் தொகை பெருக்கத்தால், உலகின் பல நாடுகளிலும் மரங்கள் அழிக்கப்பட்டு, வானுயர்ந்த கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வாகனப் பெருக்கத்தால், பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், பூமியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதாகவும் சுற்றுசூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். இது குறித்து, சுற்றுசூழல் நிபுணர்கள் கூறியதாவது,
தொலைத் தொடர்பு, போக்கு வரத்து, கட்டுமானம் போன்ற பல துறைகளிலும் நவீனமயமாக்கல் நடைபெற்று வரும் அதே நேரத்தில், பூமி வெப்பமடைந்து வருவதால், விரைவில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டடங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதும், இயற்கை வளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, எரிபொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதும், மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டால் கதிர்வீச்சுக்களை அதிக அளவில் பரவ விடுவதுமே, பூமியின் வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமிலவாயு (கார்பன்டை ஆக்சைடு), வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் அடர்த்தியை குறைத்துள்ளது. இதன் காரணமாக சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், பூமியில் நேரடியாக ஊடுருவி வருவதால், இங்கு வாழும் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் உள்ளிட்ட பல கொடிய நோய் தாக்கம் ஏற்படுகிறது.
அடுத்த, ஆறு ஆண்டுகளில் ஆர்க்டிக் பெருங்கடலில் காணப்படும் பனிப்பாறைகள் பெருமளவு உருகிவிடும். இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, பூமியின் பெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கருத்துகளுக்கு, அமெரிக்க விஞ்ஞானிகளில் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, அவர்கள் மேற்கொண்டுள்ள தொடர் ஆய்வின் பலனாக பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது,
கடந்த ஆகஸ்டு மாதம், செயற்கைக் கோள் மூலம் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதிகள் படம் எடுக்கப்பட்டன. கடந்த மாதம், அதே பகுதியில் படம் எடுக்கப்பட்டது.
இந்த ஓர் ஆண்டு காலத்தில் மட்டும் ஆர்க்டிக் கடல் பகுதியில் பனிப் பாறைகள், கடந்த ஆண்டை விட,60 சதவீதம் அதிகரித்துள்ளன. இதற்கான சான்றுகள், செயற்கை கோள் படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
பூமி வெப்ப மயமாதல் மட்டுமே, பனிப்பாறைகள் உருகக் காரணம் என்பது தவறு. பூமியில் நடைபெறும் பல்வேறு மாற்றங்களால், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது இயற்கையே.
இந்நிகழ்வு, பூமி குளிர்வடைந்து வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்க்டிக் கடல் பகுதியில் முன்பை விட பனிப்பாறைகள் அதிக அளவில் உருவாகியுள்ளன. எனவே, வெப்ப நிலை அதிகரிப்பு பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.