சிரியாவில் அப்பாவிகள் மீது விஷவாயு பிரயோகம்: ஐ.நா. குழு உறுதிப்படுத்தியது

un-logo1சிரியாவில் அப்பாவி மக்கள் மீது மிகப்பெரிய அளவில் சரின் விஷவாயு பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. ரசாயன நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது அரசுத் தரப்பா அல்லது கிளர்ச்சியாளர்களா என்பது குறித்து ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதை சிரியா அரசு மறுத்தது. எனினும், அந்நாட்டில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஐ.நா. நிபுணர்கள் புலன்விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கள் விசாரணையை முடித்து  ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பான் கீ மூன் திங்கள்கிழமை சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறியது:

டமாஸ்கஸின் கூட்டா பகுதியில் பெருமளவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை நிபுணர்கள் குழு கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு அப்பாவி மக்கள் மீது சரின் விஷவாயு பிரயோகிக்கப்பட்டுள்ளது.

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது போர்க் குற்றமாகும். மேலும் 1925ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் சர்வதேச சட்டத்தின் நெறிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல் இது.

தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பதாக சிரியா அளித்துள்ள வாக்குறுதியை அந்நாடு நிறைவேற்றத் தவறினால் அதன் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்க வேண்டும் என்று பான் கீ மூன் கூறினார்.