அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் சாவு

navyyardஅமெரிக்காவில் கடற்படைத் தளத்தில் 3 நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உயர் பாதுகாப்பு கொண்ட கடற்படைத் தளம் அமைந்துள்ளது. இந்தக் கடற்படைத் தளத்துக்கு ராணுவச் சீருடை அணிந்த 3 நபர்கள் திங்கள்கிழமை வந்தனர். அவர்கள், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் மீது திடீரென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு 3 நபர்களும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். சுதாரித்துக் கொண்ட மற்ற கடற்படை வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஒரு நபர் கொல்லப்பட்டார். மற்ற இரு நபர்களும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டனர்.

வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் 13 பேர் உயிரிழந்ததை நகர மேயர் வின்சென்ட் கிரேவும், நகரின் காவல்துறைத் தலைவர் கேத்தி லேனியரும் உறுதிப்படுத்தினர். “”சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நபரைத் தவிர மேலும் 2 நபர்களும் ஆயுதங்களுடன் வந்தது குறித்து மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களில் ஒரு நபர் 40-50 வயதுடைய வெள்ளையினத்து நபர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இருவரையும் தீவிரமாகத் தேடி வருகிறோம்” என்று கேத்தி லேனியர் தெரிவித்தார்.

இத்தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு போலீஸ் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டார். இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.