கிணற்றில் தவறுதலாக விழுந்த சீனப்பெண் ஒருவர் பதினைந்துநாள் வெறும் மழைநீரை குடித்தும் மக்காச்சோளக்கதிர்களை சாப்பிட்டும் உயிர்தப்பியிருக்கிறார்.
சீனாவின் மத்திய பிராந்தியமான ஹெனான் பிராந்தியத்திலுள்ள ஷோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சு கியூ சூ என்கிற 38 வயதான பெண்மணி.
இவர் செப்டம்பர் மாதம் முதல் தேதி வழக்கம் போல மருத்துவ மூலிகைச் செடிகளைத் தேடி வயலுக்குச் சென்றார். தனது கிராமத்தை ஒட்டிய மக்காச்சோளக் கொல்லையில் மூலிகைச் செடிகளை பறித்துக்கொண்டிருந்தவர் திடீரென அங்கிருந்த 12 அடி ஆழமான கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
மக்காச்சோளப்பயிர் ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்ததால் அதற்குள் இருந்த கிணற்றை இவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர் கிணற்றுக்குள் விழும் சமயத்தில் தன் கைக்குச் சிக்கிய மக்காச்சோளப் பயிரைப் பிடித்துத் தப்பிக்கப்பார்த்திருக்கிறார். ஆனால் அவர் பளுவைத்தாங்க முடியாத மக்காச்சோளப்பயிர்கள், அவர் கையோடு வந்தது தான் மிச்சம்.
கிணற்றுக்குள் விழுந்த சு கியூ சூ அந்த கிணற்றிலிருந்து வெளியேற முயன்றார். முடியவில்லை. காரணம் அந்த கிணற்றுக்கு படிக்கட்டுக்கள் இல்லை. அந்த கிணற்றின் சுவர் வழுவழுப்பாக இருந்ததால் அவரால் அதிலிருந்து மேலேறியும் வர முடியவில்லை. உதவிகோரி அவர் கொடுத்த குரலும், மக்காச்சோளக்கொல்லையை தாண்டி வெளியில் எட்டவில்லை.
உதவிக்கு யாருமின்றி, உண்ண உணவுமின்றி நிர்கதியாய் நின்றவருக்கு, அவர் கிணற்றில் விழுந்தபோது கையோடுவந்த மக்காச்சோளப்பயிர்களில் இருந்த சோளக்கதிர்கள் தான் கைகொடுத்தன. அந்த மக்காச்சோளக்கதிரில் இருக்கும் மக்காச்சோளத்தை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டவர், மழைத்தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்தார்.
சூவை காணவில்லை என்று அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடினாலும் யாரும் இந்த கிணற்றில் வந்து பார்க்கவில்லை.
தொடர்ந்தும் அவர் உதவி கேட்டு குரல் கொடுத்தபடி இருந்தார். சரியாக பதினைந்துநாட்கள் கழித்து அவரது அபலைக்குரல், அந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்யவந்தவரின் காதில் விழ, அவர் தீயணைப்புப்படைக்கு தெரிவிக்க, அவர்கள் வந்து இவரை கிணற்றிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சூவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த பதினைந்துநாள் பட்டினியில் சூவின் எடை ஏறக்குறைய சரிபாதியாக குறைந்திருக்கிறது. முன்பு 52 கிலோ எடையாக இருந்த சூ இப்போது 36 கிலோ எடை இருக்கிறார்.
தன் மனைவி உயிருடனும் உடல்நலத்துடனும் தனக்கு மீண்டும் கிடைத்தது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கும் சூவின் கணவர் லீ, அவர் இன்னமும் திட உணவு சாப்பிடத்துவங்கவில்லை என்றும் இப்போதைக்கு திரவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். -BBC