ஏமன் நாட்டில் அல்-காய்தா தீவிரவாத அமைப்பினர் நடத்தியத் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட 56 பேர் உயிரிழந்தனர்.
ஏமன் நாட்டில் ஷாப்வா மாகாணத்தில் உள்ள மாய்ஃபா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். அதன்மீது அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த அல்-காய்தா தீவிரவாத அமைப்பு வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் போலீஸார் 8 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்கள் மீதும் அந்த அமைப்பினர் காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் ராணுவ வீரர்கள் 38 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், அல்-நுசைமா என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2011ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது முதல் அல்-காய்தா அமைப்பினர் தங்களை பலப்படுத்திக் கொண்டனர். அதன்பின் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்று கொண்ட அப்தர்பா மன்சூர் ஹதி மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரி ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றதாக, மூன்று அல்-காய்தாவினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.