மெக்ஸிகோவில் நிலச்சரிவு: நூற்றுக்கும் அதிகமானோர் பலி

maxico floodமெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அகபுல்கோ என்ற இடத்திலிருந்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மிகேல் ஒசாரியோ சாங் இச்செய்தியை வெளியிட்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் என்ரிக் பெனா நைட்டோ உடனிருந்தார்.

அங்குள்ள லா பின்டாடா கிராமத்தில் ஏற்பட்ட பெருத்த நிலச்சரிவால் பாதி கிராமம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 101 பேர் உயிரிழந்ததாகவும் 68 பேர் காணாமல் போயிருப்பதாகவும் ஒசாரியோ சாங் தெரிவித்தார்.

மேலும் இன்கிரிட் மற்றும் மனுயெல் ஆகிய இரு வெப்பமண்டல புயல்களின் தாக்கத்தால் நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் மற்றும் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வடமேற்கு மாநிலமான சினாலோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட மனுயெல் புயலால் 3 பேர் கொல்லப்பட்டனர். 100,000 மக்கள் பாதிப்புக்குள்ளாகினர் என்று அவர் கூறினார்.

பெரும் பாதிப்புக்குள்ளான குவரேரோ மாநிலத்தில் 65 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள அகபுல்கோ என்ற இடத்திலிருந்து மெக்ஸிகோவிற்கு செல்லும் இரண்டு சாலைகள் நிலச்சரிவில் மூழ்கிவிட்டன.

காவல்துறை ஹெலிகொப்டர்கள் மூலமாக லா பின்டாடா கிராமத்திலுள்ள மக்கள் மீட்கப்பட்டு வந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக தரைவழியாக அவர்கள் மீட்கப்பட்டு வருவதாக ஒசாரியோ சாங் தெரிவித்தார்.

மேலும் நிலச்சரிவின் காரணமாக 1000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அகபுல்கோவில் சிக்கிக் கொண்டதாகவும், தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.