நெய்ரோபி தாக்குதல் – 68 பேர் சாவு

kenya_nairobi_attackகென்யாவின் தலைநகர் நெய்ரோபியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் காரணமாக 175 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வளாகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கென்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோசப் ஒலே லென்கூ கூறியுள்ளார்.

சோமாலியாவில் இருந்து செயல்படும் அல் ஷபாப் அமைப்பு சனிக்கிழமையன்று வேஸ்ட்கேட் வர்த்தக வளாகத்தை தாக்கிக் கைப்பற்றியது.

அதிபரின் உறவினர்களும் பலி

தனது உறவினர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கென்ய அதிபர் உகுரு கென்யாட்டா கூறியுள்ளார்.

கனடிய ராஜதந்திரி ஒருவரும், இரண்டு பிரன்ச் நாட்டினரும், கானாவைச் சேர்ந்த பிரபல கவிஞர் கோபி அவூனூரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். கானாவுக்கான ஐ நா தூதராக, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு பேராசிரியர் அவூனூர் பணியாற்றியுள்ளார். இவரின் கவிதைகள், கானாவில் பள்ளிக் கூடப் பாடங்களில் இடம்பெற்றுள்ளன.

இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளை முறியடிக்கும் நடவடிக்கைகளில் தற்போது பாதுகாப்புப் படையினர் எடுத்து வருகின்றனர்.

அந்த இடத்தில் தொடர்ந்து துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கின்றன. ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டுப் பறப்பதாக அங்கிருக்கும் பிபிசி நிருபர் தெரிவிக்கிறார். -BBC