தேவாலய குண்டுவெடிப்புகளைக் கண்டித்து பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

pakistan_christian_protestபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் எண்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் கிறிஸ்தவ சமூகத்தார் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கம் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் குரலெழுப்புகின்றனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் குண்டுத் தாக்குதலைக் கண்டித்திருந்தனர்.

அந்நாட்டின் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக நடந்துள்ள தாக்குதல்களிலேயே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் இது என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அரசாங்கம் இந்த சம்பவத்துக்காக மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது.

பாகிஸ்தானிய தாலிபான் அமைப்புடன் தொடர்புடைய ஆயுதக் குழு ஒன்று இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. -BBC