உலகின் மிகப்பெரும் சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனக்காடுகளுக்கு அருகில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒரு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராக ஐந்து நாள் போராட்டம் ஒன்றினை நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வங்கதேசத்தில் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பில் தலைநகர் டாக்காவில் ஒரு பேரணியை நடத்திய அவர்கள் அதன் பின்னர், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சுந்தரவனக்காடுகளை நோக்கிய தமது நெடிய பயணத்தை தொடங்கினர்.
சுந்தரவனப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால், உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடமாகும்.
அங்கு அமைக்கப்படவுள்ள அந்த அனல் மின் நிலையம், அந்தப் பகுதியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
அந்த அடர்ந்த சதுப்புநிலக் காடுகள்தான், பெங்கால் புலிகளின் மிகப் பெரும் வாழ்விடமாகத் திகழ்கிறது.
இந்த அனல் மின் நிலையம், இந்தியா மற்றும் வங்கதேசத்தால் கூட்டாக அமைக்கப்படவுள்ளது.