‘இலங்கை போரின்போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர் ஒப்புதல்

ban-mahindaநியூயார்க், செப். 26- இலங்கை இறுதிக்கட்ட போரின்போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது என்று ராஜபக்சே முன்னிலையில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒப்புக்கொண்டார்.

ஐ.நா. பொதுச்சபையின் 68-வது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பேசியதாவது:-

ஐ.நா.வின் செயல்பாடுகளை உள்ஆய்வு செய்தபோது, இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அமைப்புரீதியாக ஐ.நா. தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. உறுப்பு நாடுகள், தாங்கள் நிர்ணயித்த பணிகளை ஐ.நா.செய்வதற்கு போதிய ஆதரவை அளிக்கவில்லை. ஐ.நா.வும் உரிய முறையில் செயல்படவில்லை.

இப்போது முதல் நடவடிக்கையாக, சால்ஸ் பெட்ரி கமிட்டியின் சிபாரிசுகளை கவனமாக ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்போம். அக்குழு எனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும். இதர நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு பான் கி மூன் பேசினார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, ஐ.நா.வின் செயல்பாடுகள் சரியில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததால், அதுபற்றி ஆராய சார்லஸ் பெட்ரி என்பவர் தலைமையில், ஒரு குழுவை ஐ.நா. நியமித்தது. அக்குழு இலங்கைக்கு நேரில் சென்று பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தது. 7 ஆயிரம் ஆவணங்களையும ஆய்வு செய்தது. ஐ.நா.வின் செயல்பாடு எப்படி இருந்தது என்று ஆய்வு செய்தது.8 மாத கால ஆய்வை முடித்துக்கொண்டு, ஐ.நா.விடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் உள்ள தகவல்களை அடிப்படையாக வைத்துத்தான், பான் கி மூன், பரபரப்பாக பேசி உள்ளார்.