கத்தார்: “உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்”

world_cup_qatarகத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்பான பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள ஒரு புலனாய்வு அறிக்கை தம்மை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று அந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகையில், இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாளத் தொழிலாளர்கள் பெருமளவுக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அங்கு நடைபெற்று வரும் துஷ்பிரயோகம் நவீன கால அடிமைத்துவம் என்று கார்டியன் தனது கட்டுரையில் வர்ணித்துள்ளது.

நேபாளத்திலிருந்து வேலைக்காக கத்தார் நாட்டுக்கு வந்துள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவினர் கூறியுள்ளனர்.

கத்தார் நாட்டு அரசாங்கமோ இந்தக் குற்றச்சாட்டுகளை தாங்கள் ஆராயப்போவதாக தெரிவித்துள்ளது.

இரண்டுமாதத்தில் 44 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 44 நேபாள பணியாளர்கள் தமது பணியிடங்களில் இதய நோய்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடர்பான கட்டுமான இடங்களில் பணிபுரியும் பணியாளர்களின் உடல் நிலை, அவர்களது நலன், பாதுகாப்பு, மற்றும் கௌரவம் ஆகியவை தமக்கு மிகவும் முக்கியமான ஒன்று எனவும், அவை 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமானது என்றும் இந்த போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் கூறியுள்ளனர்.

தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் வந்துள்ள தகவல்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், ஜூரிக் நகரில், அடுத்த மாதம் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் நடைபெறவுள்ள ஃபிஃபாவின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படும் எனவும் சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா கூறியுள்ளது. -BBC