நாடு திரும்பினார் ரொவ்ஹானி: ஒருபக்கம் வரவேற்பு – மறுபக்கம் செருப்பு வீச்சு

rouhani_receptionஇரானிய அதிபர் ஹஸன் ரொவ்ஹானி அமெரிக்க அதிபருடன் தொலைபேசியில் உரையாடியிருந்த நிலையில், ஆர்ப்பரிப்புக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் நாடு திரும்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் பங்குபெற நியூயார்க் சென்றிருந்த இரானிய அதிபர், அங்கிருந்தபோது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 15 நிமிட தொலைபேசி உரையாடலை அமெரிக்க அதிபருடன் நடத்தியிருந்தார்.

தலைநகர் தெஹ்ரான் திரும்பிய ரொவ்ஹானிக்கு பெரும் இராஜதந்திர முன்னெடுப்பை செய்துள்ளார் என்று கூறி ஒரு புறம் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேநேரம், நூற்றுக்கும் அதிகமான மற்றொரு கூட்டம் அவர் விமான நிலையத்துக்கு வந்தபோது கற்களையும், செருப்புகளையும் அவரை நோக்கி வீசியிருந்தனர்.

தாயகம் திரும்பிய அவரை, விமான நிலையத்தில் நாட்டின் அதியுயர் மதத் தலைவர் அயோத்துல்லா அலி கமனேயின் பிரதிநிதி வரவேற்றார்.

இது அவரது நடவடிக்கைகளுக்கு, நாட்டின் அதியுயர் தலைவரின் ஆதரவு உள்ளது என்பதையே காட்டுகிறது என்று நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதேபோல சமூக வலைத்தளங்களான ட்விட்டர் போன்றவைகளில் கூட அவருக்கான ஆதரவு பெருகிவருகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இரானியத் அதிபர்கள் நேரடியாக பேசுவது என்பது இதுவே முதல் முறை. -BBC