காரோட்டினால் கருப்பை பாதிப்பு: சவுதியில் எச்சரிக்கை!

saudiwomendriverகார் ஓட்டும் பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று சவுதி அரேபிய மதகுரு ஒருவர் எச்சரித்துள்ளார்.

சவுதிப் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கக் கோரும் புதிய பிரச்சார இயக்கம் ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே, மதகுரு ஷேக் சாலேஹ் அல் லொகால்டன் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

காரோட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளப் பெண்களுக்கு, பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட குழந்தை பிறக்கும் ஆபத்து உள்ளது என்று அவர் மேலும் கூறுகிறார்.

கணவர் காயமடைந்திருந்தாலோ அல்லது இக்கட்டான ஒரு சூழலிலோ சிக்கியிருந்தால் மட்டுமே அங்கு பெண்கள் காரோட்டலாம் என்று அந்த கடும்போக்கு மதகுரு கூறியுள்ளார்.

சவுதி அரேபிய நாட்டில் பெண்கள் காரோட்டுவதற்கு அதிகாரபூர்வ தடையேதும் இல்லையென்றாலும், அங்கு பெண்கள் காரோட்ட அனுமதிக்கப்படுவதில்லை.

காரோட்டும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற புதிய பிரச்சார இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து பன்னிரெண்டாயிரம் பேர் இதுவரை அங்கு கைச்சாத்திட்டுள்ளனர்.

இப்பிரச்சாரத்தை நடத்தும் இயக்கம் டிவிட்டர் மூலமும் தாங்கள் ஆதரவு திரட்ட முற்பட்டபோது, தங்களது டிவிட்டர் கணக்கு சவுதியில் முடக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாக கூறியுள்ளனர். -BBC