பத்து ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா கண்ட வளர்ச்சி என்ன?

tamil_wikipediaஇணையத்தில் கட்டற்ற தகவல் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவின் தமிழ் மொழிப் பிரிவு தொடங்கப்பட்டு தற்போது பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சென்னையின் அண்ணா பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இன்று ஞாயிறன்று நடந்துள்ளது.

விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களாகவும் ஆர்வலர்களாகவும் இருக்கும் நூறு பேர் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் கனடா போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வையும் அதில் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற ஆர்வத்தையும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியாவின் வளர்ச்சி

2003ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் விக்கிப்பீடியா ஒரு வருடம் ஆன நிலையில் ஐம்பதுக்கும் குறைவான கட்டுரைகளைத்தான் கொண்டிருந்தது.

ஆனால் தற்போதைய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமான பங்களிப்பாளர்களிடம் இருந்து ஐம்பத்தேழாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை அது கொண்டுள்ளது.

கட்டுரைகளில் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், கட்டுரைகளின் விவரச் செறிவு தொடர்பான பல்வேறு அளவுகோல்களை வைத்துப் பார்க்கையில், இந்திய மொழிகளில் முதல் இரண்டு இடங்களில் தமிழ் இருந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழ் விக்கிப்பாடியாவின் பங்களிப்பாளராகவும் சென்னை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான இரவிசங்கர் தமிழோசையில் இது தொடர்பாகப் பேசுகையில், இந்திய மொழிகளிடையே முன்னணியில் இருந்தாலும், ஐரோப்பிய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி குறைவாகவே உள்ளது என்று கூறினார்.

ஒரு மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்க ஐரோப்பிய மொழி விக்கிப்பீடியாக்களின் அளவுக்கு தமிழ் விக்கிப்பீடியா வளரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பின்தங்கியிருப்பதன் காரணங்கள்

உயர் கல்வி தமிழில் இல்லாததும், தமிழ்நாட்டில் மற்ற அறிவுசார் செயற்பாடுகள் இன்னும் ஆங்கிலத்திலேயே நீடிப்பதும் தமிழ் விக்கிப்பீடியா வேகம் குறைந்திருக்கக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பதியப்பட்ட ஆவணங்களையே அறிவுச்சான்றுகளாக ஏற்றுக்கொள்கின்ற ஒரு மரபு வந்துவிட்ட நிலையில், தமிழ் சமூகம் போல வாய்வழி அறிவுப் பரிமாற்றங்களைக் நம்பியிருந்த சமூகங்களுடைய அறிவை ஆவணப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நடுநிலையைப் பேணவேண்டும் என விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர்கள் இடையே விதி உள்ளது என்றும், உள்ளிடப்படும் தரவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்போது அதனை சரிபார்த்து திருத்தவும் வசதி உள்ளது என்றும், அதையும் மீறி விஷமத்தனமாக தகவலை உள்ளீடு செய்பவர்களைத் தடுக்கவும் மென்பொருள் வழிகள் உள்ளன என்றும் இரவிசங்கர் தெரிவித்தார். -BBC