சீன, தமிழ்ப்பள்ளிகளால் இன ஒற்றுமைக்கு சீர்குலைவா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 1, 2013.

 

m-kulasegaranசீனப்பள்ளிகளும் தமிழ்ப் பள்ளிகளும் இருக்கும் வரையில் இனங்களுக்கான ஒற்றுமை இருக்கப் போவதில்லை என்ற கருத்துடன்யாடிம்”(YADIM) எனப்படும் யாயசான் டக்வா இஸ்லாமிய மலேசியா  இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் அஸ்ராப் வாஜ்டி டுசுக்கி  கூறி உள்ளார்.

 

இது போன்ற பொறுப்பற்ற கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதலில் பேராசிரியாக இருக்கும் அவரை ஒன்றைக் கேட்கிறேன். இனங்களுக்கிடையிலான ஒற்றுமை இல்லை என்று அவர் நினைத்தால் அதற்கு காரணம் கல்வி விஷயத்தில் இந்த பாரிசான் அரசாங்கத்தின் பிரித்தாலும் கொள்கைத்தான் என்பதனை இவர் உணர்ந்துள்ளாரா? மாரா, யு..டி.எம் போன்ற பல்கலைக் கழங்கள் வெறும் மலாய் மாணவர்களை கொண்டு இயங்கும் போது எப்படி இன ஒற்றுமை ஏற்படும் ? அதனைக் களைய பேராசிரியர் பரிந்துரை ஏதும் வைத்திருக்கின்றாரா?

 

இன ஒற்றுமை இல்லை என்று கூறினால், தமிழ் மற்றும் சீன பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர் இந்த நாட்டு மேம்பாட்டுக்காக மலாய்க்க்காரார்களுடன் இணைந்து பல்வேறு தொழில் துறைகளில் தோளோடு தோள் சேர்ந்து உழைக்கவில்லையா? இன ஒற்றுமை இல்லாமல்தான் சீன மற்றும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இந்த 56 ஆண்டுகளாக பாரிசானுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்களா?

 

பாரிசான் அரசாங்கம் மட்டுமே அரசாங்க வேலைகளிலும் மற்றும் அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களிலும்  மலாய்க்காரர் அல்லாத மலேசியர்களை அதிகமாக எடுக்காமல் மலேசியர்களை பிரிந்தாளுகிறது என்பதுதான் உண்மை. இதனால் மலாய்காரர் அல்லாதவர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்களே தவிர இனங்களிடையே ஒற்றுமை இல்லை என்பது தவறான கருத்தாகும்..

 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் நம் நாட்டுத் தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை பறைசாற்றிக் கொண்டு வருகிறார்கள். உலகத்தில் எங்குமே இல்லாத  மூன்று மொழிப் பள்ளிகளிகள் இந்தநாட்டில் இருப்பதே, மலேசியாவிற்கு பெருமை சேர்ப்பதாகும். அவற்றை காப்பாற்றவும் அவற்றின் வளர்ச்சிக்காவும் அரசாங்கம் பாடுபடுவதை ஒரு கடமையாக கொள்ள வேண்டும்.

 

சீன, தமிழ்ப்ப்பள்ளிகள் நாட்டின் இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கின்றன என்பதற்கு எந்தவித ஆதாரமும்  காட்டாத பேராசிரியற்கு, எப்படி பாரிசான் அரசு இன ஒற்றுமைக்கு உலை வைக்கிறதென்று ஆதாரத்துடன் நான் சொல்கிறேன்:

 

மலேசிய அரசாங்கத் துறையில் பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே முன்னுரிமை.

உபகாரச் சம்பளம் வழங்குவத்தில் மலாய்க்காரர்களுக்கு அதிக முன்னுரிமை.

பல்கலைக்கழக வாய்ப்பு மற்ற இனங்களுக்கு அவர்கள் விகிதாசாரத்திற்கேற்ப வழங்க மறுத்தல்.

மாரா, யு..டி.எம் போன்ற பொது மக்கள் வரிப்பணத்தை கொண்டு இயங்கும் பல்கலைக்கழகங்களில் 100 சதவிகிதம் மலாய் மாணவர்களுக்கு மட்டுமே போதனை வழங்குதல்.

அமான சாஹம் பூமிபுத்ரா முதலீட்டின் வழி ஓரினத்திற்கு மட்டுமே வாய்ப்பளித்தல்.

 

இது போன்ற எத்தனையோ கண்ணெதிரே இன ஒற்றுமையை குலைக்கும் வேலைகளை அரசாங்கமே செய்து கொண்டிருக்கும் போது, தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளால் மட்டுமே இன ஒற்றுமை சீர்குலைகின்றது என்று கூறுவது சிறு பிள்ளைத் தனம்.

 

சிங்கப்பூரை உதரணமாக காட்டியிருக்கும் பேராசிரியர் அங்கு தாய் மொழி பாடம் கட்டாயமாக்கப் பட்டிருக்கின்றது என்பதை முதலில் தெரிந்த்து கொள்ளவேண்டும். அதற்கான செலவினங்களும் அராசாங்தாலேயே ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதனையும் அவர் அறிய வேண்டும். அடிப்படை உண்மைகளை அறிந்து அறிக்கை விடாது மனதில் தோன்றியதை போட்டு மக்களைக் குழப்ப வேண்டாம் என்று பேராசிரியர் அஸ்ராப் வாஜ்டி டுசுக்கியை கேட்டுக் கொள்கிறேன்.

 

TAGS: