பர்மா தமிழர்கள், தொழில் மற்றும் வர்த்தகத்தில் மெல்ல மெல்ல புக ஆரம்பித்துள்ளனர்.

burma_tamilபர்மாவில் தேசிய மயமாக்கல் நடவடிக்கை காரணமாக நகர்ப்புரங்களில் இருந்த தமிழர் செல்வந்தர்களும், படித்தவர்களும் தமது சொத்துகளை இழந்த நிலையில் இந்தியா திரும்பினர்.

அதற்குப் பிறகு கிராமப் புரங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழர்கள், தொழில் மற்றும் வர்த்தகத்தில் மெல்ல மெல்ல புக ஆரம்பித்துள்ளனர்.

 

பருப்பு ஏற்றுமதியில் ஈடுபடும் சந்திரன்

பொரும்பாலானோர் சிறு வர்தகர்களாகவே இருக்கின்றனர். விரல் விட்டுக் கூடிய சிலரே செல்வந்தர்களாக உயர்ந்துள்ளனர்.

ரங்கூனுக்கு வெளியே இருக்கும் தொழிற்பேட்டையில் பருப்பு வகைகளை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை வைத்திருக்கும் சந்திரன் சமீப ஆண்டுகளாக வியாபார வாயப்புக்கள் அதிகமாகி வருவதாகக் கூறினார். ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற இடங்களில் உள்ள நாடுகளுக்கு இவர் ஏற்றுமதி செய்கிறார்.

பர்மாவில் தன்னைப் போல ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் இருப்பதாக அவர் கூறினார். மற்ற நாடுகளைப் போல ஏற்றுமதிச் சலுகைகள் பர்மாவில் வந்தால் ஏற்றுமதி அதிகமாகும் என்றார்.

நகை வியாபாரத்தில் ஈடுபடும் சவுந்திரராஜன்நகை வியாபாரத்தில் ஈடுபடும் சவுந்திரராஜன்

ரங்கூனில் மொகல் வீதி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட முக்கிய வீதியில் பல தங்கக் கடைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியர்கள் இத்தொழிலில் கோலோச்சினர். தற்போது சவுந்திரராஜன் போன்ற ஒரு சிலரே பெரிய அளவில் இத்தொழிலில் இருக்கின்றனர்.

தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை விற்கும் கடைகளில் கூட கடனட்டைகள் இல்லை. எனவே பெரும் பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. வங்கித் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டால், நகை வியாபாரம் பலனடையும் என்றார் சவுந்தர்ராஜன்.

அதே நேரம் முந்தைய கால கட்டங்களில், பெரும் பொருளீட்டிய செல்வந்தர்கள் கோயில் கட்டுவதையே தமது சமூகப் பங்களிப்பாக கருதினர். ஆனால் இப்போதோ மதம் சாராத மனித நேயப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மர வியாபாரத்தில் ஈடுபடும் தமிழர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.மர வியாபாரத்தில் ஈடுபடும் தமிழர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.

செல்வந்தர்கள் பொதுவாக வெளிப்படையான ஆடம்பர வாழ்க்கையை கைக்கொள்வதில்லை. சமூகத்தோடு இணைந்து வாழ்கின்றனர். வங்கிகள் போதுமான அளவுக்கு இல்லாத நிலையில் வசதிபடைத்த வியாபாரிகள் இணைந்து குறுகிய கால கடன்களை வழங்கும் நிதி அமைப்புக்களை உருவாக்கியிருக்கின்றனர்.

உலகப் பிரசித்தி பெற்ற பர்மா தேக்கின் ஏற்றுமதித் தேவை அதிகமானதால் கடந்த ஆண்டுகளில் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டன. காடுகளைப் பாதுகாக்கவும், கூடுதல் வருவாய் ஈட்டவும் தேக்கு விற்பனையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் மர வியாபாரத்தில் உள்ள தமிழர்கள் சற்றே கலக்கத்தில் உள்ளனர்.

பர்மியர்களில் 32 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். சாலைகள், மின்வசதி போன்றவை போதுமானதாக இல்லாதது தொழில் துறையை கடுமையாக பாதிக்கிறது. உலகமய பொருளாதாரக் கொள்கை காரணமாக தற்போது நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கின்றன. பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சியைக் கண்டுவருகிறது. பல புதிய வாய்ப்புக்கள் தோன்றியுள்ள நிலையில் சிறிய நடுத்தர தொழிலதிபர்களாக இருக்கும் தமிழர்கள் வரும் காலங்களில் தாமும் மேல் நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். -BBC