இத்தாலியத் தீவான லேம்பெதுசாவிற்கு அருகே தஞ்சம் கோரி வந்தவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் 300 பேர் வரை இறந்திருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகிறது.
வட ஆப்ரிக்காவிலிருந்து வந்த இந்த படகு இந்த தீவின் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தீப்பிடித்து பின்னர் கவிழ்ந்தது.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 151 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், இன்னும் பலர் கடலில் இருக்கிறார்கள் என்றும் இத்தாலியக் கடலோரக் காவற்படை கூறியது.
இந்தப் படகில் சுமார் 500 பேர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் படகில் கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
இது ஒரு பெரும் துயர சம்பவம் என்று இத்தாலியப் பிரதமர் வர்ணித்தார்.
படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, உதவியைப் பெறுவதற்காக, படகை ஓட்டிவந்தவர்களே , படகுக்குத் தீவைத்ததாகவும், அந்தத் தீ, கட்டுப்படுத்தமுடியாமல் பரவியதாகவும், உயிர் தப்பியவர்கள் தம்மிடம் கூறியதாக, இந்த தீவின் மேயர் கூறினார்.
லெம்பெதுசா தீவு, டுனீசியாவுக்கும் சிசிலிக்கும் இடையே அமைந்திருக்கிறது. இத்தீவுதான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தஞ்சம் கோரி வருபவர்கள் நுழையும் பிரதான இடமாக மாறியிருக்கிறது. -BBC