குற்றவாளிகளை முதலில் சுடுவதுதான் நல்லது என ஒப்புக்கொள்கிறார் அமைச்சர்

1 1zaidiசமூக அமைப்புகள், போலீசார் குற்றவாளிகளைச் சுடும் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கடந்த பல ஆண்டுகளாக  கூறி வருகின்றன.

அக்கூற்றை மெய்ப்பிக்கிறது உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பேச்சு. முதலில் சுடுவது பிறகு விசாரணை என்பதே சரி என்றவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, சமூகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பல கருத்துக்களைச் சொன்னார். அந்நிகழ்வில் செய்தியாளர்கள் இருப்பதை அறியாமல் முதலில் பேசிய அவர், பின்னர் அவர்கள் இருப்பதை அறிந்ததும் தாம் பேசியதைப் பிரசுரிக்கக் கூடாது என்று எச்சரித்தார். மீறினால், அவர்களின் செய்தித்தாள்கள் இழுத்து மூடப்படும் என்றவர் எச்சரித்தார்.

அந்த எச்சரிக்கை பலித்தது. செய்தித்தாள்கள் அது பற்றி மூச்சு விடவில்லை. ஓரியெண்டல் டெய்லி மட்டும் அஹ்மட் ஜாஹிட் “ஆத்திரப்பட வைக்கும்” வகையில் பேசினார் எனக் குறிப்பிட்டது. ஆனால், என்ன பேசினார் என்பதை விவரிக்கவில்லை.

ஆனால், மலாக்கா, ஆயர் குரோ, அனைத்துலக வாணிக மையத்தில் அமைச்சர் ஆற்றிய 20-நிமிட உரை மலேசியாகினிக்கு கிடைத்தது.

அஹ்மட் ஜாஹிட், அவ்வுரையில் அடையாளம் காணப்பட்டுள்ள 40,000 குண்டர்களில் 28,000-க்கு மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் அவர்களைக் கைது செய்வதில் தவறேதும் இல்லை என்றும் கூறினார்.

“திருடு கொடுத்தவர்கள், கொல்லப்பட்டவர் நிலவரம் என்ன? அவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள். நம் இனத்தவர்.

“என்னைக் கேட்டால், இனி அவர்களுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது. எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆதாரம் இருந்தால், சுட்டுத்தள்ள வேண்டியதுதான்”, என்றார்.

பின்னர், பினாங்கில், இந்திய குண்டர்கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொட்டுப் பேசினார். அச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி. வேதமூர்த்தியையும்- பெயரைக் குறிப்பிடாமலேயே- கண்டித்தார்.

“ஒரு துணை அமைச்சர்……என்னிடமும் போலீசிடமும் சர்ச்சை செய்தார். சுட்டுக் கொல்லுமுன்னர் ஏன் எச்சரிக்கை வேட்டு கிளப்பவில்லை என்றார்.

“அவரிடம் நான், ஒரு என்ஜிஓ-வாக இருக்க நினைத்தால் பதவி விலகுங்கள் என்றேன். துணை அமைச்சராக இருக்கத் தகுதியற்றவர் அவர்”, என்றார்.

தடுப்புக் காவலை மீண்டும் கொண்டுவரும் குற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ) திருத்தம் தமது சொந்த சட்டம் என்றும் பெருமையாகக் குறிப்பிட்டார் அஹ்மட் ஜாஹிட்.

“உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டது. அவசரகாலச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டது. நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டது. ஆனால், அவர்கள்(எதிரணியினர்) பிசிஏ இருப்பதைக் கவனிக்கவில்லை.

“நான்தான் ஐஜிபியுடன் பேசி, அமைச்சின் சட்ட ஆலோசகருடன் விவாதித்து இதைப் பயன்படுத்தலாம் என்றேன்.

“குண்டர்களைப் பாதுகாக்க நினைப்போரை நான் எதிர்ப்பேன்”, என்றார்.

குற்றவாளிகளின் மனித உரிமைகள் மதிக்கப்பட்ட வேண்டும் என்று எதிரணியினர் பேசுவதை அபத்தம் என்று ஒதுக்கித் தள்ளிய உள்துறை அமைச்சர், போலீசாருக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு என்று வலியுறுத்தினார்.

 

TAGS: