பள்ளி அருகே இனவெறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினர், அந்த பள்ளிக்கு நஷ்டஈடாக 12 மில்லியன் யென் (ஜப்பான் நாணயம்) தர வேண்டும் என ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் இனப்பாகுபாடு காரணமாக கொரிய மக்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரிய மக்களுக்கு எதிரான ஒரு அமைப்பினர் கெய்டோ மாவட்டத்தில் பேரணி நடத்தினர். அங்குள்ள ஒரு கொரிய பள்ளி அருகே சென்று அந்த அமைப்பினர் இனவெறி கோஷங்கள் எழுப்பினர்.
பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளை பயமுறுத்தும் விதமாகவும் ஜப்பான் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் பயன்படுத்தியும் பேசியதாக அவர்கள் மீது மனித உரிமை அமைப்பினர் கெய்டோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கெய்டோ நீதிமன்ற நீதிபதி ஹிட்டோஷி ஹஸிசுமே முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தன் தீர்ப்பில், “இனப்பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. அதை ஜப்பான் அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதையும் மீறி, பள்ளி முன்பு சென்று கோஷங்களை எழுப்பி, மாணவ, மாணவிகளை கொரிய மக்களுக்கு எதிரான அமைப்பினர் பயமுறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
அதற்காக அந்த அமைப்பினர் 12 மில்லியன் யென் தொகையை நஷ்டஈடாக பள்ளிக்கு தர வேண்டும்’ என்றார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட போராட்ட அமைப்பை ஜப்பான் அரசு தடை செய்துள்ளது.
இன பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்கின்ற ஐ.நா சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஜப்பான் அந்த அபராதத்தை விதித்துள்ளது . அங்கு அப்படி இருக்கையில் மலேசியாவில் இன பாகுபாடுகளை அரசாங்கமே மேற்கொள்கிறதே , இவர்களுக்கு யார் தண்டனை கொடுக்கப் போகிறார்கள் ? மக்கள் தவறு செய்தால் மன்னன் தண்டிக்கலாம் , அரசனே தவறு செய்தால் ? யாரிடன் செல்வது ?