இந்தியர்களிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண அரசாங்கத்துக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா?

gangஉங்கள் கருத்து “அதுதான், உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இந்தியர்களை வேட்டையாடலாம் என்று சட்டப்பூர்வமாக உரிமை கொடுத்துவிட்டாரே. முதலில் சுட்டுத்தள்ளுவோம், பிறகு பேசுவோம் என்று கூறும் ‘கவ்பாய்கள்’ மலேசியாவில் வந்திறங்கி விட்டார்கள்”.

இந்தியரிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண பிஎஸ்சி அமைப்பீர்

விழிப்பானவன்: கே.குலசேகரன், இந்தியர்களிடையே நிலவும் குண்டர்தனத்தைத் தீர்க்க உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனால், இண்ட்ராப் அல்லவா, இந்தியர் விவகாரங்களுக்கு தீர்வுகாண்பதற்கான மொத்த குத்தகையையும் எடுத்திருப்பதாக தெரிகிறது. அவர்களின் எல்லைக்குள் வேறு யாரேனும் காலடி எடுத்து வைக்க விட மாட்டார்களே.  பாய்ந்து குதறி எடுத்துவிடுவார்களே.

ஹில்:  மலேசிய இந்திய சமூகத்தின் அடித்தளம் பலவீனமானது. இந்திய இளைஞர்கள் தமிழ்த் திரைப்படங்களின் செல்வாக்குக்கு எளிதில் ஆளாகி விடுகிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டலும் இல்லை. இதுதான் இச்சமூகத்தின் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.

ஆலயங்கள் சரியான பாதையைக் காண்பிக்கலாம். ஆனால், மற்ற சமயங்கள் செய்வதைக்கூட இந்து ஆலயங்கள் செய்வதில்லை.

மலேசிய இந்து சங்கம் இந்தியரிடையே குண்டர்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றுவது பற்றி எண்ணிப் பார்க்கலாம்.

ஏசிஆர்:  ஒரு காலத்தில் தோட்டப்புறங்கள் இந்தியர்களின் பிழைப்புக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தன. அதுவும்கூட ஒரு விஷ வட்டம்தான். அது, தாத்தாவைப்போல் பேரனையும் தோட்டப்புற வாழ்க்கையைத் தயாராக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பால் வெட்டத் தெரிந்தது, செம்பனைத் தோட்டங்களில் பழம் பறிக்கத் தெரிந்தது. படிப்பறிவு இல்லை, இருந்தாலும் மிகக் குறைவுதான்.  தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் முதலியவை தோட்டங்களிலேயே அமைந்து அவர்கள் வெளியில் போகாதபடி பார்த்துக்கொள்ளப்பட்டது.

தோட்டங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதும் நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். படிப்பறிவு இல்லை, தொழில்திறன்கள் இல்லை, பலரிடம் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டைகள்கூட இல்லை. அவையின்றி பள்ளிகளில் சேர்வதோ, வேலையில் சேர்வதோ முடியாத காரியமாக இருந்தது.

இண்ட்ராப் தலைவர் கேட்ட கேள்வி சரியான கேள்வியாகவே படுகிறது- ஏன் இந்தியர்களுக்கு பெல்டா, பெல்க்ரா போன்ற திட்டங்களில் இடமளிக்கவில்லை?

நேர்மை:  அதுதான், உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இந்தியர்களை வேட்டையாடலாம் என்று சட்டப்பூர்வமாக உரிமை கொடுத்துவிட்டாரே. முதலில் சுட்டுத்தள்ளுவோம், பிறகு பேசுவோம் என்று கூறும் ‘கவ்பாய்கள்’ மலேசியாவில் வந்திறங்கி விட்டார்கள்.

மைஓப்101:  முதலில் சுடுவோம் பிறகு பேசலாம் என்பது ஒரு நல்ல யோசனை என ஜாஹிட் நினைக்கிறார்போலும். துப்பாக்கித் தோட்டாக்கள் அவர்களின் உயிரைப் பறிக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது குற்றத்தடுப்புச் சட்டம் (பிசிஏ).  ஈராண்டுகளுக்கு உள்ளே தள்ளிப் பூட்டி வைக்கலாம்.  இந்த வகையில் குண்டர்தனத்துக்குத் தீர்வு காணலாம் என்றவர் நினைக்கிறார்.

நியாயவான்:  குற்றவிகிதம் உயர்ந்து கொண்டே போவதற்கான காரணத்தை அரசாங்கம் கண்டறிந்து அப்பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை உருவாக்க வேண்டும். யாரும் விரும்பி குற்றச் செயல்களில்  ஈடுபடுவதில்லை.

வறுமைதான் அதற்குத் தலையாய காரணம் என்றால், வறுமையை ஒழிக்க முயல வேண்டும்.  மனிதத்தன்மையற்ற, கொடூரச் சட்டங்களைக் கொண்டு குற்றவாளிகளை ‘ஒழித்துக்கட்டுவது’ சரியான தீர்வாகாது.

வயதானவன்57:  50 ஆண்டுகள் கடந்த பின்னரும், எத்தனையோ அரசியல் தலைவர்கள் அவர்களின் முன்னேற்றத்துக்காக ‘பாடுபட்டும்கூட’, இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. அவர்கள் பட்ட பாடு சொந்தப் பைகளை நிரப்புவதற்குத்தானோ.

குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட இந்தியர்களைப் பிரதிநிதித்து பிஎன்னில்தான் எத்தனை கட்சிகள்? இந்தியர்களை உதவி தேவைப்படும் ஒரு சமூகமாக அம்னோ என்றும் கருதியதில்லை. அதனால்தான் அவர்கள் இன்றும் அதே நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் இன்னும் அம்னோவை ஆதரிப்பது ஏன்?

எஸ்எஸ் டாலிவால்:  அந்த மக்களுக்கு உதவும் அரசியல் நோக்கம் பிஎன்னுக்குக் கிடையாது.  இண்ட்ராப் முயன்றது, முடியவில்லை. இந்திய கோடீஸ்வரர்களும் தொழில் அதிபர்களும் சேர்ந்து ரிம50 அல்லது ரிம 100 மில்லியன் செலவில் தொழில்திறன் பயிற்சிக் கழகம் ஒன்றை அமைக்கலாம்.  ஆனால், சாதிய முறை இருக்கிறதே. அது, பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவ விடாது.

ஜேம்ஸ்:  டாலிவால் யோசனை நன்றாகத்தான் உள்ளது.. அந்தப் பயிற்சிக் கழகத்தை நம்பிக்கையாவனர்களின் பொறுப்பில் விட வேண்டும். ஆனால், மஇகா-வினருக்கு இடமளிக்கக்கூடாது.

அக் கழகம் சிறப்பாக செயல்பட்டால், மற்ற இன தொழிலதிபர்களும் உதவுவார்கள். சீனக் கல்விக் கழகங்கள் சுய-உதவி மூலமாகத்தான் தொடங்கப் பெற்றன. இன்று, நீலாயில் ஸியாமான் பல்கலைக்கழகம் அமையப்போகிறது.

சாபி:  குண்டர்தனத்தை  ஒழிக்க போலீஸ் விவேகமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். போலீஸ் படையிடம் போதுமான மனித அற்றல் இல்லை என்றால் மக்களுடன் நல்ல இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதன்வழி மக்களின்  ஆதரவை பெற்று பொது ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் பெறாதவரை, போலீஸ் சொந்த ஆற்றலைத்தான் நம்பி இருக்க வேண்டும். சமுதாயத்தின் உதவி அதற்குக் கிடைக்காது.

 

 

 

 

TAGS: