மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

malalaஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள், மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, மலாலா, 16, மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது; ஆனால், அந்த தாக்குதலில் இருந்து, மலாலா உயிர் பிழைத்து விட்டார்.

மலாலா எழுதிய, ‘ஐயாம் மலாலா: தி கேர்ல் ஹூ ஸ்டுட் அப் பார் எஜுகேஷன் அண்டு வாஸ் ஷாட் பை தி தலிபான்’ என்னும் புத்தகம், கடந்த செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டது.

மேலும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மலாலா, தற்போது, பிரிட்டனில், அரச குடும்பத்தினர் வசிக்கும், பக்கிங்ஹாம் அரண்மனையில், தன் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.

மலாலாவால் கவரப்பட்ட, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், வரும், 18ம் தேதி, மலாலாவை சந்திக்கிறார். வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் விழாவில், மலாலாவுக்கு, ‘மிரர் பிரெய்ட் ஆப் பிரிட்டன்’ விருதை, பிரபல கால்பந்து வீரர், டேவிட் பெக்காம் வழங்குகிறார்.

இந்நிலையில், தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஷகீதுல்லாஷாகித், ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் உள்ள பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக அவர் தாக்கப்படவில்லை. இஸ்லாமிய மதத்தை கேலிக் கூத்தாக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்காக, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தமுறை, மலாலாவை கண்டிப்பாக கொல்வோம். அவரைக் கொல்வதில், பெருமைப்படுகிறோம். இவ்வாறு, ஷாகித் கூறியுள்ளார்.