காலரா பரப்பிய குற்றச்சாட்டில் ஐநாவுக்கு எதிராக ஹெய்ட்டி வழக்கு

haiti_choleraஉலகிலுள்ள வறிய நாடுகளில் ஒன்றாக காணப்பட்ட போதிலும் ஹெய்ட்டிக்குள் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை, அதாவது சுமார் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் கொலரா அங்கு எட்டிப்பார்த்தது கூட கிடையாது. ஒரு காலரா நோயாளி கூட அதற்கு முன்னர் அங்கு பதிவானது கிடையாது.

ஆனால், 2010-ம் ஆண்டின் இறுதியில் அங்குள்ள முக்கிய நதிக்கரையை ஒட்டி திடீரென்று ஊடுறுவத் தொடங்கிய காலரா நோய் பின்னர் சனநெருக்கடி மிக்க நகரங்களெங்கும் பரவியது.

வாந்திபேதி நோயான காலரா, எட்டாயிரத்துக்கும் அதிகமனோர் ஹெய்ட்டியில் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் மோசமாக நோய்வாய்ப்பட்டார்கள்.

காலரா நோய் கட்டுக்கடங்காது பரவிவரும் நேபாளத்தைச் சேர்ந்த ஐநா அமைதிகாக்கும் படையினர் ஹெய்ட்டியில் தங்கியிருந்த முகாமிலிருந்து தான் காலரா கிருமிகள் பரவியிருப்பதாக பிபிசியும் இன்னும் பல தரப்பினரும் நடத்திய விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.

அங்கிருந்து கசிந்து வெளியான கழிவுகளிலிருந்துதான் காலரா தொற்று பரவியிருக்கிறது என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

காலரா நிபுணரும் ஒருகாலத்தில் ஐநாவில் பணிபுரிந்தவருமான டானியல் லான்டேன்சேவின் கருத்துப்படி, அனேகமாக, ஐநா படைகளின் முகாம் தான் காலராத் தொற்றுக்கான காரணமாக இருக்கிறது.

ஹெய்ட்டியில் காலரா தாக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஒருலட்சம் அமெரிக்க டொலர்களும் நோய்வாய்ப்பட்ட மற்ற எல்லோருக்கும் 50 ஆயிரம் டொலர்களும் ஐநா நட்டஈடாக வழங்க வேண்டும் என்றுதான் நியுயோர்க்கிலுள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி அதாவது லீகல் இமியூனிட்டி, இருப்பதாக ஐநா கூறுகிறது. ஐநாவின் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

ஆனால், ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக வழக்குத் தொடர்ந்துள்ள வழக்குரைஞர்கள், ஐநாவின் வாதத்தை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

உலகளாவிய நிறுவனமான ஐநாவைப் பொறுத்தவரை, இந்த ஹெய்ட்டி காலரா விவகாரம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அது சர்வதேச சட்டத்தின் மிக முக்கியமான மைல் கல்லாகவே பார்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. -BBC