இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ள கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள், அதுமாத்திரமன்றி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியையும் கனடா நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.
காமன்வெல்த் அமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடா வருடாந்தம் 20 மில்லியன் டாலர்களை அந்த அமைப்புக்கு வழங்கிவருகிறது.
இலங்கையில் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று காரணம் காட்டியே ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் அந்த மாநாட்டை பகிஸ்கரிப்பது என்று அறிவித்துள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குவந்த இலங்கைப் போர், மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி ஆகியவற்றில் அங்கு நிலவரங்கள் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
”கடந்த 2 வருடங்களில் இந்த விடயங்களில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுடன், அந்த நிலைமைகளில் கணிசமான பின்னடைவு, மற்றும் அவை மேலும் மோசமடைதல் ஆகியவற்றை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று நான் முடிவு செய்திருக்கிறேன்” என்று கனடிய பிரதமர் கூறியுள்ளார்.
அதுமாத்திரமன்றி, கமன்வெல்த் அமைப்புக்கான கனடாவின் நிதி உதவிகளையும் தாம் நிறுத்துவது குறித்து ஆராய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘கமலேஸ் சர்மா இலங்கையின் கைப்பாவை’
இதேவேளை கனடாவின் மூத்த செனட் உறுப்பினரும், காமன்வெல்த்துக்கான கனடிய பிரதமரின் தூதுவருமான ஹியூ சேகல் அவர்கள் காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஸ் சர்மா, இலங்கையின் கைப்பாவையாகச் செயற்படுவதாக விமர்சித்துள்ளார்.
இலங்கை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் விவகாரத்தை உதாரணமாகக் காண்பித்துப் பேசிய ஹியூ சேகல் அவர்கள், அவை குறித்த தகவல்கள் அமைப்பின் தலைவர்களுக்கு செல்வதை செயலர் மறைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே கனடா இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று எடுத்த முடிவு குறித்து கருத்து வெளியிட்ட காமன்வெல்த் அமைப்பின் பேச்சாளரான ரிச்சர்ட் உக்கு அவர்கள், தமது உறுப்பினர்களின் முடிவை தாம் மதிப்பதாகக் கூறியுள்ளார், ஆனால் ”காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் இலங்கையின் கைப்பாவை என்று கூறியதை” அவர் நிராகரித்துள்ளார்.
இலங்கை கண்டனம்
ஆனால் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற கனடாவின் முடிவை இலங்கை கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த மாநாட்டுக்கு ஏனைய அனைத்து நாடுகளும் ஏகோபித்து ஆதரவு தரும் நிலையில், கனடா அதனை புறக்கணிப்பதன் மூலம், அது தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் கூறியுள்ளார்.
கனடா இலங்கை மாநாட்டை முற்றாக பகிஸ்கரிப்பதாகக் கூறவில்லை. வெளியுறவு அமைச்சு மற்றும் ஏனைய நிலைகளில் உள்ள பிரதிநிதித்துவம் ஒன்று கனடாவின் சார்பில் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளத்தான் போகிறது. -BBC