“நெருங்கிய நட்பு நாடு’ அந்தஸ்து இந்தியாவுக்கு தற்போது இல்லை: பாகிஸ்தான்

india pakistanஇந்தியாவில் 2014இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன், நெருங்கிய நட்பு நாடு அந்தஸ்து (எம்.எஃப்.எஸ்.) அளிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்தார்.

வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியபோது, “இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் கடந்த மாதம் நியூ யார்க்கில் சந்தித்துப் பேசியது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவுக்கு எம்.எஃப்.எஸ் அந்தஸ்து அளிக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தற்போது எதிர்பாராத அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் ஏற்பட்டுள்ள விளைவே இது’ என்றார்.

மேலும் இஷாக் தர் கூறுகையில், “”இந்தியாவுடன் பன்னோக்குப் பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க பாகிஸ்தானும் ஆர்வமாக உள்ளது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இந்திய தரப்பில் செயல் ரீதியாக உள்ள சில பிரச்னைகளை புரிந்து கொண்டுள்ளோம்.

காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரை ஐ.நா. விசாரணைக்கும் பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதையே இந்தியப் பிரதமர் விரும்புகிறார். இந்திய மக்களவைத் தேர்தலுக்குப்பின் இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்படும்” என்று தெரிவித்தார்.

இந்திய-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக 1999இல் இந்திய பிரதமர் லாகூர் பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், அதன்மூலம் ஏற்பட்ட நல்லுறவு சில தீய சக்திகளால் தொடர்ந்து சீர் குலைக்கப்படாமல் இருந்திருந்தால், தற்போது நல்ல பயன் கிடைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டார்.