கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், “இந்த நிலைமையைக் கண்டு நீங்கள் அனைவரும் வருத்தம் அடைந்திருப்பீர்கள். சாதாரண நிலையில் நாடு இல்லை. 17 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இது அனைவரையும் பாதிக்கும்.
இதற்கு குடியரசுக் கட்சியினர் தான் காரணம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் பாதிப்பு ஏற்படும், வர்த்தகம் தடைப்படும், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும், பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்த முடியாது. இதனால் அரசு செலுத்த வேண்டிய தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல், கடன் பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் அமெரிக்கா இடம் பெறும். இதன் மூலம் நாட்டின் நம்பகத்தன்மை குலைந்துவிடும்.
முதலில் அமெரிக்க வரவு செலவு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். கடன் உச்சவரம்பை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையேல் நாட்டின் பொருளாதாரம் முடங்கும் என்றார் ஒபாமா.