2014-க்கு பிறகும் ஆப்கனில் அமெரிக்கப் படைகள் நீடிக்க இரு நாடுகளிடையே ஒப்பந்தம்: தலிபான் எச்சரிக்கை

Enduring Freedom2014க்கு பிறகும் ஆப்கனில் அமெரிக்கப் படைகள் நீடிக்கும் என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான் பயங்கரவாத அமைப்பு தலைவர் முல்லா முகமது ஒமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவை அழிக்க, அமெரிக்கா  தலைமையிலான நேட்டோ படையைச் சேர்ந்த 87,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோர் இடையே சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 2014ஆம் ஆண்டுக்கு பிறகும் அமெரிக்கப் படைகள் ஆப்கனில் நீடிக்கவும், அவர்களுக்கு ஆப்கனில் உள்ள ராணுவ இடங்களை குத்தகைக்கு விடுவது குறித்தும் இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் நிறைவேற்ற அதிபர் கர்சாய் முடிவு செய்துள்ளார்.

தலிபான் எச்சரிக்கை: இந்த உடன்பாட்டுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலிபான் இணையதளத்தில் அந்த அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஒமர் வெளியிட்டுள்ள செய்தி:

அமெரிக்காவுக்கு ராணுவ இடங்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது.

ஆப்கனில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நீடித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும். முன்பைவிட அதிக உத்வேகத்துடன் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம்.

வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளைத் தடுக்க ஆப்கன் மக்கள், அதிபர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று ஒமர் தெரிவித்துள்ளார்.