குடியரசுக் கட்சியின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காணும் திட்டத்தை ஒபாமா நிராகரித்ததால் அமெரிக்காவில் நெருக்கடி நீடிக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்ஜெட்டுக்கு குடியரசுக் கட்சி ஒப்புதல் தர மறுத்தது. மேலும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடன் உச்சவரம்பை உயர்த்தவும் குடியரசு கட்சி மறுத்து விட்டது. அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் நிலவி வரும் நெருக்கடியைச் சமாளிக்க எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி புதிய யோசனைகள் அடங்கிய திட்டத்தை வழங்கியது. ஆனால் இதனை ஒபாமா நிராகரித்து விட்டார்.
இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. இதனால் அங்குள்ள அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது பற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அமி பிரண்டே கூறும்போது, “ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் நல்ல நம்பிக்கையுடன் செயல்பட்டு நெருக்கடிக்கு தீர்வு காண முன்வரவேண்டும்’ என்றார்.
ஒபாமா விரைவில் ஜனநாயகக் கட்சியினருடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் குடியரசுக் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்தது. அப்போது பிப்ரவரி மாதம் வரையிலாவது நாட்டின் கடன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், கடனுக்கான உச்சவரம்பை 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.