கிழக்கு மியான்மரில் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவத்தினருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த புரட்சியாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
மியன்மார் தலைநகர் யாங்கோனில் இருந்த பிரபலமான ஹோட்டல் ஒன்றில் கடந்த 14ம் திகதி நடைபெற்ற வெடிவிபத்தில் அங்கு குடும்பத்துடன் தங்கியிருந்த அமெரிக்கப் பெண்மணி ஒருவர் காயமடைந்தார்.
பயங்கரவாத செயல்கள் என்று இதனைக் கண்டித்த அமெரிக்கா, அதிகாரிகளை சட்டத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
இன்று மீண்டும் கிழக்குப் பிராந்தியத்திலேயே மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீன எல்லையை ஒட்டிய கலவரம் மிக்க ஷன் மாநிலத்தில் உள்ள நம்காம் என்ற பகுதியில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் நகராட்சித் தொழிலாளி ஒருவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளும், மியான்மருக்கு சுற்றுலா செல்லும் தங்கள் பயணிகளை அதிக கவனத்துடன் இருக்கும்படி எச்சரித்துள்ளன.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளையும், அடுத்த ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சம்மேளனத்தையும் மியான்மர் நடத்த உள்ளது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புதிய அரசு சிறுபான்மைப் போராளிகளுடன் புதியதொரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு மேற்கத்திய நாடுகளின் தடைகளை விலக்கச் செய்தது.
அதன்பின்னரே இங்கு குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். ஆயினும், சில பகுதிகளில் இத்தகைய கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவது அரசாங்கத்தில் மாற்றங்களை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாததையே காட்டுகின்றது.