அமெரிக்கா: முடிவுக்கு வந்தது முடக்கம்

obamaAகடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு புதன்கிழமை இரவு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதனையடுத்து, 16 நாள்களாக நீடித்து வந்த அரசுத்துறை முடக்கம் முடிவுக்கு வந்தது.

இதன் மூலம், உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி, கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம், ஒபாமா அரசு அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அமெரிக்காவின் வரவு-செலவுத் திட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. இதனால் நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற இயலாத சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அரசுத்துறைகளை நடத்த நிதி ஒதுக்கீடு இல்லாததால் அவை முடக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற, அரசின் கடன் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என ஆளும் ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்தது. இதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

சமரசம் காண்பதற்காக இரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளிலும் இழுபறி நீடித்து வந்தது.

இதற்கிடையை, பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க வேண்டுமானால், புதன்கிழமை நள்ளிரவுக்குள் கடன் உச்சவரம்பை உயர்த்தியாக வேண்டும் என்று நிதித்துறை கெடு விதித்திருந்தது.

இந்நிலையில், கெடு முடிய நான்கு மணி நேரம் கூட இல்லாத நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் 81-க்கு 18 என்ற வாக்கு விகிதத்திலும், பிரதிநிதிகள் சபையில் 285-க்கு 144 என்ற வாக்கு விகிதத்திலும் அமெரிக்க கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான மசோதா வெற்றி பெற்றது.

முன்னதாக, ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் சுமார் 11 மணி நேரம் நடந்த விவாதத்துக்குப் பின்னர் இந்த மசோதா இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றதும், உடனடியாக அதிபர் ஒபாமா அந்த மசோதாவில் கையெழுத்திட்டு அதனை சட்டமாக இயற்றினார்.

“தொடர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், 2014′ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சட்டம், தற்போது 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்களாக உள்ள அமெரிக்க கடன் உச்சவரம்பை மேலும் உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 1-லிருந்து, ஜனவரி 2014 வரை பல்வேறு அரசுத் துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து, கட்டாய விடுப்பிலுள்ள சுமார் எட்டு லட்சம் ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது இயற்றப்பட்டுள்ள தொடர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி கட்டாய விடுப்பிலிருந்த நாள்களுக்கும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

2,400 கோடி டாலர் இழப்பு!

இரண்டு வாரங்களுக்கும் மேல் அரசுத் துறைகள் முடக்கப்பட்டதால் அமெரிக்காவுக்கு 2 ஆயிரத்து 400 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான “ஸ்டாண்டர்டு அண்டு புவர்’ தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிதியாண்டின் அடுத்தமூன்று மாத பொருளாதார வளர்ச்சியில் 0.6 சதவீதம் பின்னடைவு ஏற்படும் என்றும், இதன் காரணமாக இந்த நிதியாண்டின் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதம் வெறும் 2 சதவீதமாகவே இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.