சிரியாவில் 14 இடங்களில் ரசாயன ஆயுதங்கள் தொடர்பான சோதனையை நடத்தியிருப்பதாக ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பு (ஓபிசிடபிள்யூ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நெதர்லாந்தின் தி ஹேக் நகரைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பு தெரிவித்ததாவது:
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக 20க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 14 இடங்களில் எங்கள் குழுவினர் நேரில் சென்று, சோதனைகளை நடத்தினர். சிரியாவில் மொத்தமுள்ள ரசாயன ஆயுதங்களில் சுமார் 50 சதவீத அளவுக்கு சோதனைகளை நடத்தி முடித்துள்ளோம். மொத்த ஆயுதங்களும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் அழிக்கப்பட வேண்டியுள்ளது என்று ஓபிசிடபிள்யூ தெரிவித்துள்ளது.
எனினும், மேற்கண்ட 14 இடங்களிலும் ரசாயன ஆயுதங்கள் இருந்தனவா என்பது குறித்து தகவல் இல்லை.
ஓபிசிடபிள்யூ அமைப்புக்கே உலக அமைதிக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒபாமா பாராட்டு: இதனிடையே, சிரியாவிலுள்ள ரசாயன ஆயுதங்களை ஒழிக்க ஐ.நா. எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடன் வரம்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, அரசுத் துறை முடக்கம் முடிவுக்கு வந்த பின்பு, முதல் முறையாக அந்நாட்டுக்கு வருகை தந்திருந்த இத்தாலிய பிரதமர் என்ரிகோ லெட்டாவை வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பின், இரு தலைவர்களும் செய்தியாளர்களிடையே உரையாற்றினர்.
அப்போது அதிபர் ஒபாமா கூறுகையில், “”சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானத்தை மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் உறுதியான நடவடிக்கைகளையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
சிரியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் இத்தாலி நாடு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
சிரியாவில் நிகழ்ந்து வரும் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்கள் துயர் நீங்கி தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வகையிலான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் இத்தாலியின் ஒத்துழைப்பை அமெரிக்கா விரும்புகிறது.
லிபியாவைப் பொருத்தவரை, அந்நாட்டு அரசின் கரங்களை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நட்பு நாடுகளுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து நானும், பிரதமர் லெட்டாவும் விவாதித்தோம்.
லிபிய மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. அவர்களுடைய இப்போதைய தேவையெல்லாம் அவர்களுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கவல்ல, அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய, அனைத்து தரப்பாரையும் உள்ளடக்கிய ஒரு வலிமையான அரசாங்கம்தான்” என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.