– டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 19,2013.
நல்லதொரு நாட்டுக்கும், அதன் தலைவர்களுக்கும் நிலையான கொள்கைகளிருக்க வேண்டும். நம் நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் கொண்டவைகளாகவும் நகைச்சுவையாகவும் உள்ளன. ஆனால், இதுவரை இவர்கள் பேசியதையும், செய்தவற்றையும் ஆழமாகக் கவனித்தால், இவர்கள் தேசத்திற்கும், மக்களுக்கும் ஆற்றியுள்ளது சேவைகள் அல்ல துரோகம், சுய அரசியல் வாழ்வுக்காக மக்களிடம் வேற்றுமையையும், காழ்ப்புணர்வையுமே வளர்க்கின்றனர் என்பது தெளிவாகிறது.
அந்த ரீதியில், இன்றைய பிரதமர் நஜி ராசாக் இப்படிப்பட்ட சதிராட்டத்தில் அனைவரையும் மிஞ்சி விட்டார் என்றால் மிகையாகாது. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் ஒரு மலேசியா, இன்று இரண்டு மலேசியா, பொதுத் தேர்தல் வந்தால் அனைவரையும் அரவணைப்பதில் அக்கறை. அம்னோ தேர்தலுக்கு முன் மலாய்கார்களின் நலனில் மட்டும் அக்கறை.
தேர்தலுக்கு முன் அமைச்சரவை ‘’அல்லாஹ்’’ என்ற வார்த்தையைப் பொதுவுடமையாக்க உத்தரவிடும். தேர்தலுக்குப் பின் அதே அரசாங்கம் அந்த வார்த்தையை மற்றவர்கள் பயன் படுத்துவதைத் தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெறும். தேர்தலுக்கு முன் ஓன் மலேசியா உதவித்தொகை வழங்கும், அதன்பின் எரிபொருள் விலை முதல் எல்லாம் விலையும் ஏறிவிடும்! அவைகளுக்கான உதவித்தொகைகள் அகற்றப்படும்!
இப்பொழுது வெளிநாடுகளில் இருக்கும் பிரதமர், ஐக்கிய நாடுகளின் மத்தியில் தன்னை ஒரு மிதவாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார், ஆனால், இங்கு இப்பொழுது நடப்பதோ வேறு; உலகுக்கே பொதுவான ஒரு சொல்லான இறைவன் ‘’அல்லாஹ்’’ என்ற அரபு சொல்லைத் தனிச் சமய உரிமையாக்கப் பாடு படுகிறார்கள். ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்க வேண்டிய தலைவர்கள், அவர்களின் நடவடிக்கையின் வழி தேசத்தை மட்டும் கூறு போடவில்லை, மனிதகுலத்தின் அமைதியான வாழ்வுக்கே ஊறு விளைவிப்பதாக, உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவின் தலையாயப் பத்திரிக்கையான ‘’ஜாக்கர்த்தா போஸ்ட்’’ எச்சரித்துள்ளது.
இந்த நாட்டிலும் பல இஸ்லாமியப் பெரியவர்களும் அம்னோ அரசாங்கத்தின் கூற்று மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் மீதும் கேள்வி எழுப்பியுள்ளனர். திருக்குரானின் காணப்படும் திருவாசகங்களின் அடிப்படையில் அவர்களின் கேள்விகளைத் தொடுத்துள்ளனர். இங்கு இஸ்லாமியர்கள் அதிகம் இருப்பதால், கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடைவிதிப்பதைப் போன்று, கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் நாடுகளும் முஸ்லீம்களுக்கு ‘’அல்லாஹ்’’ என்ற வார்த்தையைப் பயன் படுத்துவதற்கு அவர்கள் தடைவிதித்தால் என்னவாகும் என்றும் கேள்வி தொடுத்துள்ளனர். ஒரு சமயத்தில் அரசியல் அதிகாரம் ஒரு சாராரின் கையிலிருந்தால், அதனைக் கொண்டு அவர்கள் உலக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க எத்தனிக்கக் கூடாது என்ற அவர்களின் கருத்தையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்
மேலும், நீதிமன்றத் தீர்ப்பு சபா, சராவா மக்களுக்குப் பொருந்தாது, அங்குள்ள மக்கள் தாராளமாக அச்சொல்லைப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் ஜோச குரு தெரிவித்துள்ளார். அவரின் வாதம், நீதிமன்றத் தீர்ப்பைக் கேலிக்கூத்தாக்கி விட்டுள்ளது. நீதியின் முன் அனைத்து மக்களும் சமமே என்ற நமது அரசியலமைப்பு விதிகளையும் இது நகைப்புக் குறியதாக ஆக்கிவிட்டது. ஒரே மலேசியாவாம், எத்தனை வேறுபாடுகள்!.
ஆக, தங்கள் சக்திக்கும் அறிவுக்கும் எட்டாதவை மீது முடிவு எடுப்பதாக எண்ணிக் கொண்டு இந்நாட்டு மக்களின் ஒற்றுமையான வாழ்வுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்ந்து இக்கட்டாக இருப்பதைப் பாரிசான் தலைவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி பறிபோனாலும் பாரிசான் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான கண்டன அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் டாக்டர் சேவியருக்கு பாராட்டுகள்.
மடத்தன வாதம் ,,அறிவில்லாதவன் ,அனுபவம் இல்லாதவன் நாட்டை வழிநடத்தினால் நாடு குட்டிச்சுவராக போகவேண்டியதுதான்
இது அந்நாளில் இருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது—நமக்கு எண்ணெய் வளம் இருப்பதினால் இவன்கள் எதுவேண்டுமானாலும் செய்ய முடியும் என செய்து கொண்டிருக்கின்றான்கள்– வேலை இல்லாமல் இருப்பவர்கள் நம்மவர்கள் — நம்மவர்கள் எக்கேடு கெட்டால் இவன்களுக்கு என்ன? அரைகுறை படித்த தகுதில்லா இவன்கள் இல்லா அரசாங்க அலுவலகங்களே இல்லை— இவன்கள் செய்யும் தவறுகளை எல்லாம் நாம் பொறுத்துக்கொண்டோ போகவேண்டிய நிலை. இதை கேட்க நாதி இல்லை…..!!!
டாக்டர் உங்களுக்கு ஒன்று தெரியுமா? ” யாரை எங்கே வைப்பது என்று { மக்களுக்கு } யாருக்கும் தெரியலே ? அட நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் வேஷம் { மக்களுக்கு } புரியுலே ” நல்லவர் போல் நடித்திடுவார் தன்னை நம்பிய மனிதனை கெடுத்திடுவார் உலகம் இதுதான் உலகம்?
சீரியன், உங்க பாட்டு நல்ல இருக்கய்யா! இன்றை மக்கள் நிலையே அதுதான்.