பலூனில் 30 கி.மீ., உயரத்தில் பறக்க RM 2.5 லட்சம் கட்டணம்

skyவாஷிங்டன்: பூமியிலிருந்து, 30 கி.மீ., உயரம் பறந்து, பாராசூட் உதவியுடன் மீண்டும் கீழே இறங்கும் ராட்சத பலூன் பயணத்தை, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

பூமியிலிருந்து, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களின் மூலம் வானத்தில் பறந்து மீண்டும் தரையில் இறங்கும் அனுபவம் அலாதியானது. வெளிநாடுகளில் பலர் இந்த சாகசங்களில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும், ஒரு குறிப்பிட்ட உயரம் வரை சென்று மீண்டும் தரையிறங்கும் முறையே தற்போது நடைமுறையில் உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம், பூமியிலிருந்து, 30 கி.மீ., உயரம் வரை, பலூனில் மேலே பறந்து சென்று, பாராசூட் உதவியுடன் மீண்டும், கீழிறங்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது.

இதன்படி, ராட்சத பலூனில் பயணிப்பவர்களுக்காக, விசேஷ இருக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் அமர்ந்து, பலூன் மூலம், பூமியிலிருந்து, 30 கி.மீ., உயரம் வரை பறந்து சென்று, அதில் பொருத்தப்பட்டுள்ள பாராசூட் உதவியுடன் மீண்டும் தரையில் இறங்கலாம்.

அப்போது, வளி மண்டலத்தில் நிலவும் இருட்டு, தட்ப வெப்பநிலை, நட்சத்திரங்களில் ஒளிர்வு, ஆகியவற்றை உணர முடியும்.

இந்த புதிய அனுபவத்தைப் பெற, RM2.5 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும், அவ்வளவு உயரத்திலிருந்து பூமியைக் காண்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சியை உண்டாக்கும் என்றும், இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.