அதிபர் ஒபாமா ஒப்புதலுடன்தான் ஜெர்மன் பிரதமர் உளவு பார்க்கப்பட்டார்

obamaAஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒப்புதலுடன்தான் அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய உளவு அமைப்பு (என்எஸ்ஏ), ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை உளவு பார்த்து வந்தது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஜெர்மன் பிரதமர் மெர்கலின் செல்போன் உரையாடல்களை, கடந்த 2010-ம் ஆண்டு முதல்  அமெரிக்க உளவு அமைப்பான என்எஸ்ஏ உளவு பார்த்து வருகிறது. இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தாமல், தொடர்ந்து கண்காணிக்கும்படி அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடந்த புதன்கிழமை மெர்கல் தொடர்பு கொண்டு உளவு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டு எழுப்பினார்.

அப்போது ஒபாமா, என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்த்து வருவது தனக்கு தெரியாது எனவும், அவற்றை உடனடியாக நிறுத்த உத்தரவிடுவதாகவும் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

AngelaMerkelபிரதமர் மெர்கலை என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்த்தது குறித்த விவரங்கள் அனைத்தும் அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் ஊழியரான ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களில் உள்ளது.

அதில் 2002-ம் ஆண்டு முதல் பிரதமர் மெர்கலின் செல்போன் எண் ஒட்டு கேட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்கலுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்துவந்தது. குறிப்பாக, லிபியா போராட்டத்தில் ஜெர்மன் அரசின் முடிவை ஒபாமா கடுமையாக எதிர்த்தார்.

எனினும், 2002-ம் ஆண்டு இராக் போரின்போது, ஜெர்மன் படைகளை அனுப்பியதை தொடர்ந்துதான் அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வந்தது என்று அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்து அரசு முடிவு: உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாக ஸ்விட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அங்கு வெளியாகும் வாரப் பத்திரிகைக்கு அந்நாட்டு அதிபர் உலே மாரர் அளித்த பேட்டி:

அரசின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு வாரத்திற்குள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.