சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன்! மக்கள் பணத்தில் மக்களுக்கே லஞ்சமா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அக்டோபர் 31, 2013.

 Dr-Xavier-Jeyakumarமலேசியாவை முன்னேறிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப் பாடுபடுவதாகக் கூறும் பிரதமர் நஜிப் மற்றும் அவரின் அமைச்சரவையிடமும் அதற்கான அணுகு முறைகள் அறவே இல்லை என்பதனை உணர்த்துகிறது கெடா சுங்கை லீமாவ்  இடைத்தேர்தலில் அங்குள்ள சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு குறித்துத் துணைப் பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளது.

 

ஒரு முன்னேறிய நாடு என்றால் அதற்கான தகுதி உயரமான கட்டங்களைக் கட்டியிள்ளனரா? எவ்வளவு  விலை உயர்ந்த வாகனங்களைத்  தலைவர்களும்  அவர்களின் குடும்பங்களும் பயன் படுத்துகின்றன எத்தனை வைர  ஆபரணங்களை இவர்களின் மனைவிகளும்  சுற்றத்தாரும் பயன் படுத்துகிறார்கள் என்ற அடிப்படையை வைத்து அம்னோ கணிக்கக் கூடாது.

 

அவை மக்களின் வாழ்க்கைத் தரம்,  அவர்களின் கல்வி , சுகாதாரம், நீதி, தனிமனிதர் உரிமை, சட்டம் ஒழுங்கு, மற்றும் மக்களின் வருமானமும், சிந்தனையும் சேர்ந்தவை என்று உணர்ந்து கொள்ளும் மனப் பக்குவம் கூட இல்லாத அமைச்சரவை முன்னேறிய நாடு குறித்துப் பேசுவது நகைச்சுவையாக உள்ளது.

 

இந்த மண்ணில் பிறந்த எல்லா இன மாணவர்களுக்கும் அவரவர் தாய் மொழியில் பாகுபாடற்ற முறையில், கல்வி கற்க,  வசதிகள் வழங்கப் படவேண்டும். அப்படி இங்கு நடப்பது உண்மையானால் சுங்கை லீமாவ் தொகுதியிலுள்ள மூன்று சீனப்பள்ளிகளுக்கும் இப்பொழுது நிதி அறிவிப்பு ஏன்? அதன் நோக்கம் இடைத்தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குவதுதானே. அப்படியானல் மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளைப் பெறக்கூட ஓட்டு என்ற லஞ்சத்தை அம்னோ தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதானே அர்த்தம்.

 

ஆக, இப்படிப் பட்டவர்கள் கோட்டுப் போட்ட கோமாளிகளா, கிரிமினல்களா? முன்னேறிய நாடு அந்தஸ்து அடையத் துடிக்கும் நாட்டின் தலைவர்களுக்கு அதற்கான இங்கிதம் அறவே தேவையில்லையா?  தனியே செல்லும் ஒருவரின் கழுத்தில் கத்திவைத்து வழிப்பறியில் ஈடுபடும்  கொள்ளையன்,  உன் கைப்பையா உயிரா என்றால்! அந்தத் தனி நபர் என்னச் செய்வார்? மலேசிய மக்களின் நிலை அப்படிப்பட்ட இக்கட்டில் அல்லவா உள்ளது. பாரிசானுக்கு ஓட்டு போட்டால்தான் பள்ளிக்கு நிதிறென்ற அவலநிலைக்கு மக்களைத் தள்ளக்கூடாது.

 

கடந்த 56 ஆண்டுகளாக இந்திய இனத்தின் அடிப்படை தேவைகள் மட்டும் இந்த அரசாங்கத்தால் ஊதாசீனப்படுத்தப்பட வில்லை. மற்ற மலேசியர்களின் உரிமைகளும் புறக்கணிக்கப் பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமே, துணைப் பிரதமர்  மொகிதீன் யாசினின், மூன்று சீன மொழிப் பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பு.

மலேசிய மக்கள், இந்நாட்டின்  எஜமானர்கள் தங்கள் சொந்த நாட்டில், தாங்கள் செலுத்தும் வரிப் பணத்தில் சேவையாற்ற வேண்டிய  அரசாங்கத்திடம் அவர்களின் உரிமைக்காக, மக்களின் அன்றாட தேவைகளுக்காக அம்னோவிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலையா? இதுதான் சுதந்திரமா? அதற்குப் பெயர் முன்னேறிய நாடா?

 

நாம் வழங்கிய அதிகாரம் எவ்வளவு கீழ்த்தனமாகப் பயன்படுத்தப் படுகிறது. நாட்டின் எஜமானர்களாக இருக்க வேண்டிய மக்களை, பிச்சைக்காரர்களாக ஆக்கி விட்டனர் என்பதனை உணர்ந்து, மக்கள் தெளிவடைய உதவ வேண்டியது அரசியல்வாதிகளின் கடமை மட்டுமன்றி  அனைவரின் கடமையுமாகும். உரிமைக்காக, மக்களின் தேவைகளுக்காக அம்னோவிடம் இன்னும் எத்தனை ஆண்டுகள் பிச்சை எடுக்க வேண்டும்  என்ற சுயமரியாதை உணர்வு நமக்கும் வேண்டும்.

 

ஆக, அங்குள்ள வாக்காளர்கள் மட்டுமின்றி, இந்நாட்டுப் பிரஜைகளான ஒவ்வொரு வாக்காளரும் நமது உரிமைகள் பற்றி சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம்  இது.

 

 

TAGS: