ரசாயன ஆயுத உற்பத்தி சாதனங்களை அழிக்கும் சிரியா

syria chemicalரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் சாதனங்களை சிரியா முற்றிலுமாக அழித்துள்ளதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு, தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த அமைப்பு, ரசாயன ஆயுத உற்பத்தி சாதனங்களை அழிப்பதற்காக சிரியாவுக்கு வெள்ளிக்கிழமை வரை கெடு விதித்திருந்தது.

இந்நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாகவே இந்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிரியாவில் ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு உதவும் இயந்திரங்கள், ரசாயன குண்டுகளில் விஷ வாயுக்களை நிரப்பும் கருவிகள் முதலியவை முற்றிலுமாக, அழிக்கப்பட்டுவிட்டன. அதனை நாங்கள் ஆய்வு செய்து, உறுதிப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், சிரியாவில் இனி புதிதாக ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.