தாலிபன் தலைவர் கொலை: பாகிஸ்தான் கோபத்துடன் கருத்து

hakimullah_mehsudபாகிஸ்தானிய தாலிபன் இயக்கத் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அரசு கடுங்கோபத்துடன் கருத்து வெளியிட்டுள்ளது.

தாலிபன் இயக்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஹக்கிமுல்லா மெஹ்சூதின் மரணம் அழித்துவிட்டதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறியுள்ளார்.

வடக்கு வாசிரிஸ்தான் பகுதியில் தாலிபன் பிரதிநிதிகளை பாகிஸ்தான் அரச தூதுக்குழுவினர் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

மெஹ்சூத் பலியானதைத் தொடர்ந்து தாலிபன் இயக்கத்தினர் புதிய தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய தலைவர் யார் என்ற விபரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையே, தாலிபன் தலைவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் எங்கிலும் பாதுகாப்புத் தரப்பினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் தங்களின் மூத்த தளபதிகள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களில் தாலிபன் இயக்கத்தினர் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.