ஹிட்லரின் கௌரவ குடிமகன் அந்தஸ்து பறிப்பு

hitler_002ஜேர்மனியின் முன்னாள் ஆட்சியாளர் அடோல்ஃப் ஹிட்லருக்கு, 78 ஆண்டுகளுக்கு முன்னர் அளிக்கப்பட்ட கௌரவ குடிமகன் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லர் உயிரிழந்ததன் பின்னர், அவருக்கான கௌரவ அந்தஸ்தும் காலாவதியாகிவிட்டது என்பதால், இப்போது அதனை மீளப்பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் சிலர் முன்னர் வாதிட்டிருந்தனர்.

எனினும், கோஸ்லார் நகரசபையில் ஹிட்லரின் விருதைப் பறிக்கும் இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நகரசபை தனது கடந்தகால கறைபடிந்த வரலாற்றை மறைக்கப் பார்ப்பதாக அதன் எதிர்க்கட்சித் தலைவர் வாதிட்டிருந்தார்.

ஆனால் கோஸ்லார் நகரசபைக்கு அந்த கௌரவ பதவியை பறிப்பதற்கு சட்டரீதியான, விழுமிய ரீதியான கடமை இருப்பதாக மற்றவர்கள் வாதிட்டனர்.

ஜேர்மனியில், ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் சுமார் 4000 நகராட்சி மன்றங்களில் அவர் சுதந்திர மனிதனாக, அதாவது எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற குடிமகனாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.