பாகிஸ்தான் தலிபான்களின் இடைக்கால தலைவனாக அஸ்மத்துல்லா ஷஹீன் தேர்வு

talibunபாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டான். அவனுடன் அப்துல்லா, தாரிக் மெஹ்சூத் மற்றும் ஹக்கீமுல்லா மெஹ்சூத்தின் மெய்காப்பாளன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

தங்கள் தலைவனை கொன்றதால் கடும் ஆத்திரமடைந்துள்ள தலிபான் இயக்கம், இதற்கு பழிவாங்குவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

“முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்கள் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும். ஆளில்லா விமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு முழு உடந்தையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எங்கள் எதிரியை எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று வடக்கு வசிரிஸ்தான் தலிபான் கமாண்டர் அபு ஓமர் கூறியுள்ளான்.

ஹக்கீமுல்லா மசூதின் இடத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் தற்காலிக தலைவனாக ஹெர்யார் மெஹ்சூத் என்பவன் தேர்வு செய்யப்பட்டான்.

ஆனால், இதர தீவிரவாத இயக்கங்களுக்குள் இந்த தேர்வு தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்படாததால் புதிய இடைக்கால தலைவனாக அஸ்மத்துல்லா ஷஹீன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் அறிவித்துள்ளது.

இவனது தலைமையில் அமைக்கப்படும் குழு புதிய நிரந்தர தலைவனை தேர்வு செய்யும் என தெரிகிறது.