அமெரிக்கா மிச்சிகனை சேர்ந்த ஒருவர், “பில்-லேடனின் இருப்பிடம் பற்றிய உளவுத் தகவலை முதலில் கொடுத்தது நான்தான். பின்-லேடனின் தலைக்கு கொடுப்பதாக சொல்லப்பட்ட சன்மான தொகை 25 மில்லியன் டாலரை எனக்கு தர வேண்டும்” என அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவரது இந்த உரிமை கோரலில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் போலிருக்கிறது. ஏனென்றால், இவரது சார்பில் உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியிருருப்பது, சிக்காகோவின் மிக பிரபல வக்கீல் நிறுவனம், The Loevy & Loevy law firm. இந்த வக்கீல் நிறுவனம் எக்கச்சக்க பணம் வாங்கும் நிறுவனம். பெரும்பாலும் இந்த நிறுவனத்தில் டீல் எப்படியிருக்கும் என்றால், தமது வக்கீல் கட்டணத்தை, கட்சிக்காரர் பெறப்போகும் தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
உதாரணமாக, இந்த பின்-லேடன் உளவுத் தகவல் வழக்கை இவர்கள் எடுத்துக் கொள்வதென்றால், 25 மில்லியன் சன்மானம் கட்சிக்காரருக்கு கிடைத்தால், அதில் 30 அல்லது 40 சதவீதம் தமக்கு என்று ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.
ஒருவேளை கேஸ் தோற்றுப்போய், பின்-லேடனின் தலைக்காக நிர்ணயிக்கப்பட்ட சன்மான பணம் கிடைக்காவிட்டால், வக்கீல் பீஸ் கிடையாது! தம்மால் கேஸை ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை!அப்படிப்பட்ட வக்கீல் நிறுவனம் இந்த கேஸை எடுத்திருக்கிறது என்பதால், மீடியாக்களுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கட்சிக்காரர் ஜெயிப்பதற்கு தேவையான ஆதாரம் ஏதோ அவரிடம் உள்ளது என்பதே அதன் அர்த்தம். The Loevy & Loevy வக்கீல் நிறுவனம், எஃப்.பி.ஐ. டைரக்டர் ஜேம்ஸ் கோமிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், பின்-லேடன் பற்றிய உளவுத் தகவலுக்கு உரிமை கோரும் நபராக, 63 வயதான டாம் லீ என்பவரை குறிப்பிட்டுள்ளார்கள். டாம் லீ, 2003-ம் ஆண்டே பின்-லேடனின் இருப்பிடம் பற்றிய துல்லியமான தகவலை கொடுத்திருந்தார் என்கிறது வக்கீல் நோட்டீஸ்.
பின்-லேடனின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுத்ததாக சொல்லும் இந்த டாம் லீ என்பவர் யார் ? இவர் ஒரு அமெரிக்க பிரஜை. எகிப்தில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். சர்வதேச வைர வியாபாரி. வைர வியாபாரத்துக்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்பவர். அந்த வகையில் பல நாடுகளில் பலருடன் தொடர்பு உடையவர். பாகிஸ்தானில் வைர வர்த்தகம் செய்யும் குடும்பம் ஒன்றுடன் டாம் லீ பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த பாகிஸ்தானி வைர வர்த்தக குடும்பம், அல்-காய்தாவுக்கு எதிரான கருத்து கொண்டவர்கள். அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் உளவுத்துறையில் அதிகாரியாக உள்ளார். பாக். உளவுத்துறை அதிகாரிதான் பின்-லேடன் பற்றிய தகவலை கூறியிருக்கிறார். பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி, “பின்-லேடன் தற்போது பாகிஸ்தானில் அபொத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார். பாகிஸ்தான் உளவுத்துறைதான் அவர் அங்கே ரகசியமாக மறைந்து வாழ உதவுகிறது. பெஷாவார் பகுதியில் இருந்த பின்-லேடனை அழைத்துக்கொண்டு அபொத்தாபாத்தில் உள்ள வீடு ஒன்றில் விடுவதற்காக என்னை அனுப்பி வைத்தார்கள்.
நான்தான் பின்-லேடனுக்கு பாதுகாப்பு கொடுத்து, யாரும் அறியாமல் அவரை அழைத்துவந்து, அபொத்தாபாத்தில் விட்டேன். அந்த வீடு எனக்கு நன்றாக தெரியும்” என்று டாம் லீயிடம் கூறியுள்ளார். அமெரிக்கா திரும்பிய டாம் லீ, இந்த ரகசியத்தை அமெரிக்க அதிகாரிகள் யாரிடமாவது தெரிவிக்க விரும்பினார். வைர வியாபாரம் தொடர்பான விசாரணை ஒன்றில் தம்முடன் பழக்கமான கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவரது ஞாபகம் வந்தது. கஸ்டம் அதிகாரியை சந்தித்து இந்த விஷயத்தை சொன்னார்.கஸ்டம்ஸ் அதிகாரி, இந்த விஷயத்தை உளவுத்துறை எஃப்.பி.ஐ.யிடம் தெரிவிக்க, அவர்கள் தமது ஏஜென்ட் ஒருவரை அனுப்பினார்கள். டாம் லீயை சந்தித்த எஃப்.பி.ஐ. ஏஜென்ட், பின்-லேடன் பற்றிய தகவலை பெற்று சென்றிருக்கிறார். இது 2003-ம் ஆண்டு நடந்தது.பின்-லேடனின் இருப்பிடம் பற்றிய துல்லியமான தகவல் 2003-ம் ஆண்டு கிடைத்தும், 2011-ம் ஆண்டுதான் பாகிஸ்தானில் பின்-லேடன் இருக்கும் இடத்தை ரெயிடு செய்து, அவரைக் கொன்றது அமெரிக்க அதிரடிப்படை சீல் டீம். 2003-ம் ஆண்டு டாம் லீ குறிப்பிட்ட அதே அபொத்தாபாத் நகரில்தான், பின்-லேடன் மறைந்திருந்த வீடும் இருந்தது.
டாம் லீ, த கிரான்ட் ராப்பிட்ஸ் பிரஸ்ஸூக்கு கருத்து தெரிவித்தபோது, “இந்த விவகாரம்தான் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. பின்-லேடனின் இருப்பிடம் பற்றி 2003-ம் ஆண்டே துல்லியமான தகவல்கள் இருந்தும், அதன்பின் அவரை 8 ஆண்டுகள் உயிருடன் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். இப்போது, தமமே பின்-லேடனின் இருப்பிடத்தை கண்டுபிடித்ததாக கிளெயிம் பண்ணுகிறார்கள்” என்றார். தமது கட்சிக்காரர் டாம் லீக்காக இந்த கேஸை எடுத்துள்ள வக்கீல் நிறுவனமும், சில ஆதாரங்களை திரட்டியுள்ளது. டாம் லீயை விசாரித்த எஃப்.பி.ஐ. ஏஜென்ட் கேட்ட கேள்விகள், அவற்றுக்கு டாம் லீ கொடுத்த பதில்கள் அடங்கிய ரிக்கார்ட் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அத்துடன், டாம் லீ இந்த விஷயத்தை முதலில் கூறிய கஸ்ட்டம்ஸ் அதிகாரியிடம் இருந்து, லீ கூறுவது நிஜம்தான் என கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளார்கள். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் உள்ள மறைவிட வீட்டில் வைத்து பின்-லேடன் அமெரிக்க சீல் அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார். அவரது உடலையும், அமெரிக்கர்களே எடுத்துச் சென்று விட்டனர். இந்த அதிரடி தாக்குதல் நடப்பதற்கு முன், பின்-லேடனின் இருப்பிடத்தை அறிவதற்காக சில வருடங்கள் தகவல் திரட்டியதாக கூறியிருக்கிறது சி.ஐ.ஏ.
அவர்கள் கூறுவதன்படி, போன், இ-மெயில் போன்ற தொடர்பு சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல், நம்பிக்கைக்கு உரிய மனிதர்களை செய்தி தொடர்பாளராக பயன்படுத்தி வந்த பின்-லேடனை, அவரது தகவல் தொடர்பாளர் ஒருவரை வைத்தே பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நபரை ட்ராக்-டவுன் பண்ணிய சி.ஐ.ஏ., அவரது நடமாட்டங்களை பின்தொடர்ந்தது. அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு வீட்டுக்கு அவர் சென்றுவருவது தெரிந்தது. குறிப்பிட்ட வீடு பல மாதங்களாக இவர்களால் கண்காணிக்கப்பட்டது. அதன்பின், அந்த வீட்டில் பின்-லேடன் மறைந்து இருக்கலாம் என்ற ஊக அடிப்படையிலேயே, அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டு, பின்-லேடன் சுடப்பட்டு, அவரது உடல் அடையாளம் காணப்படும் நிமிடம்வரை, அங்கு பின்-லேடன் நிஜமாகவே இருந்தாரா என்பது சி.ஐ.ஏ.வுக்கே உறுதியாக தெரியாது எனவும் கூறப்பட்டது.
ஊக அடிப்படையில் செய்த தாக்குதல் என்பதால், பின்-லேடன் தலைக்கு அறிவிக்கப்பட்ட 25 மில்லியன் டாலர் சன்மான தொகை யாருக்கும் கிடையாது என்பதே, அமெரிக்க அரசின் நிலைப்பாடு. “இதில் ஊகமெல்லாம் எதற்கு? எமது கட்சிக்காரர் டாம் லீ, இதுதான் பின்-லேடனின் மறைவிடம் என்று துல்லியமாக தெரிவித்து விட்டாரே” என்கிறது, The Loevy & Loevy வக்கீல் நிறுவனம். இதற்குள் மற்றொரு விவகாரமும் உள்ளது. பாகிஸ்தானில் அபொத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பின்-லேடன் மறைந்திருக்கிறார் என டாம் லீ, 2003-ம் ஆண்டு சொன்னார். 2011-ம் ஆண்டு அதே அபொத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பின்-லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரைக்கும் சரி. அதன் பின்னர்தான் இருக்கிறது அந்த மற்ற விவகாரம். 2011-ம் ஆண்டு பின்-லேடன் மறைந்திருந்து சுடப்பட்ட அபொத்தாபாத் வீடு, 2005-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது என சி.ஐ.ஏ. கூறுவதாக செய்தி வெளியிட்டுள்ளது, ஏ.பி. செய்தி நிறுவனம். இதை சி.ஐ.ஏ. அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அந்த வீடு 2005-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், அந்த வீட்டில் பின்-லேடன் இருந்தார் என 2003-ம் ஆண்டே டாம் லீ கூறியிருக்க முடியாதே என கிளம்பும் புதிய விவகாரம்.
பாகிஸ்தானில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள வீடு ஒன்று எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கு ரிக்கார்ட் ஏதாவது பாகிஸ்தானில் இருக்குமா என்பது சந்தேகமே. ஒருவேளை இருந்தாலும், அதை பாகிஸ்தான் கொடுக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம். அந்த வீட்டின் சுவர்களையும், சிமென்ட் பூச்சுக்களையும் ஆராய்ந்து, அவை எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறிய விஞ்ஞான வழிமுறைகள் உள்ளன. ஆனால், அதுகூட இந்த கேஸில் பயன்படாது. காரணம், பின்-லேடன் கொல்லப்பட்ட வீட்டை புல்டோஸர் போட்டு, முழுமையாக இடித்து தள்ளி, அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டது பாகிஸ்தான் அரசு. பின்-லேடன் சுடப்பட்ட வீட்டையே முழுமையாக அழித்த பாக். அரசு, அந்த வீடு பற்றிய ஆவணங்களை விட்டு வைத்திருப்பார்களா? அனைத்தும் மாயமாக மறைந்திருக்கும் ! இந்த நிலையில், டாம் லீயும், அவரது வக்கீல் டீமும் உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு குடைச்சல் கொடுக்க போகிறார்கள். விவகாரம், 25 மில்லியன் டாலர் பணம் சம்மந்தப்பட்டது என்பதால், இரு தரப்பும் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இரு சாத்தியங்கள் உள்ளன. ஒன்று, மேலும் பல விஷயங்கள் வெளியாகும். அல்லது, கோர்ட்டுக்கு வெளியே, 25 மில்லியனைவிட சற்று குறைவான தொகைக்கு செட்டில்மென்ட் செய்து கொள்வார்கள்.