வங்கதேசத்தில் 167 படையினருக்கு மரண தண்டனை

bangladesh_courtவங்கதேசத்தில் 2009 இல் இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் பலியாகக் காரணமான கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டதற்காக அந்த நாட்டு பொதுமக்கள் நீதிமன்றம் ஒன்று குறைந்தபட்சம் 167 படையினருக்காவது மரண தண்டனை விதித்துள்ளது.

இதுதவிர 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும், 251 பேருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் பெரியது.

800க்கும் அதிகமானோர் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த சிவில் நீதிமன்ற வழக்கில் ஒட்டுமொத்தமாக பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இவர்கள் எல்லாரையும் ஒன்றாக விசாரிக்கபதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக நிர்மாணிக்க வேண்டியிருந்தது.

நீதிமன்றத்துக்கு வெளியே
நீதிமன்றத்துக்கு வெளியே

இறுதியாக, வெகு சாதாரணமாக நீதிபதி முறையே குற்றவாளிகளின் இலக்கங்களையும், அவர்களுக்கான தண்டனையையும் வாசித்தார்.

தலைநகர் டாக்காவில் வங்கதேச ரைபிள் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தில், முன்னர் நடந்த 30 மணிநேர கிளர்ச்சியின் போது, கொலை மற்றும் சித்ரவதைகளில் ஈடுபட்டதாக பல முன்னாள் எல்லைக் காவலர்கள் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.

அந்த கிளர்ச்சியில் 57 இராணுவத்தினர் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.

நாடளாவிய கிளர்சியில் சம்பந்தப்பட்டதாக ஏற்கனவே சுமார் 6000 படையினர் சிறையிடப்பட்டுள்ளனர்.

அனைவரையும் கூட்டமாக வைத்துக் குற்றஞ்சாட்டி, தீர்ப்பு வழங்கப்பட்டதாக இந்த வழக்கை விபரித்த, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அந்த விசாரணை நியாயமற்றது என்று கூறியுள்ளதுடன், மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளது. -BBC