‘போகோ ஹராம்’ பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜீரியாவில் 40 பேர் பலி

Boko-Haram-Violenceநைஜீரியாவில் கடந்த ஒருவாரத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

“போகோ ஹராம்’ என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாமா நகரில் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது.

அதுகுறித்து அந்தப் பகுதியின் அரசு அதிகாரி பாபா சேகு கூறியது:

70க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருசக்கர வாகனங்களில் வந்து, பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 27 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Boko-Haram-leaderமற்றொரு சம்பவம் அதேபகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்தது. பேருந்து ஒன்றில் பயணம் செய்த 13 பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இதுதவிர கால்நடைகள் பலவற்றையும் கொன்றும், வீடுகளிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

நைஜீரியாவில் முஸ்லீம்களுக்கு என தனிநாடு ஏற்படுத்த கோரி, “போகோ ஹராம்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் தலைவராக உள்ள அபுபக்கர் சேகுவை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்துள்ளது.