குதப்புணர்ச்சி வழக்கு ll விசாரணை முடிவுக்கு வந்தது

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 87 நாட்களுக்கு விசாரணை நடைபெற்றது. இனிமேல் அரசு தரப்பு, பிரதிவாதித் தரப்பு ஆகியவற்றின் வாதத்தொகுப்பை உயர் நீதிமன்றம் செவிமடுக்க வேண்டும்.

2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி அன்வார் இப்ராஹிம், முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியிருக்க முடியுமா என்பது மீது கோலாலம்பூர் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் இன்று சாட்சியமளித்தனர்.

குற்றம் சாட்டப்படுள்ள செக்ஸ் நடவடிக்கையை அன்வார் செய்திருக்கக் கூடிய சாத்தியமில்லை என டச்சு எலும்பு மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் தாமஸ் ஹுக்லாண்ட் அளித்த  சாட்சியத்தை மறுக்கும் வகையில் அரசு தரப்பு அந்த சாட்சிகளை கொண்டு வந்தது.

இரு தரப்பு வாதத் தொகுப்புக்களையும் செவிமடுப்பதற்கு நவம்பர் 23, 24ம் தேதிகளை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா நிர்ணயம் செய்தார்.

அந்த செக்ஸ் நடவடிக்கையை அன்வார் செய்ய முடியாது என பிரதிவாதித் தரப்பு வாதிடுவதாக அந்தத் தரப்பு வழக்குரைஞர்களில் ஒருவரான சங்கர நாயர் நிருபர்களிடம் கூறினார்.

பிரதிவாதித் தரப்பு விண்ணப்பித்துக் கொண்டதைத் தொடர்ந்து இன்று கோலாலம்பூர் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ ஆலோசகர் டாக்டர் எஸ் ஜெயேந்திரன் அளித்த சாட்சியத்தில் பெரும்பகுதி ரகசியமாக நடைபெற்றது.

2008ம் ஆண்டு ஜுலை மாதம் 16ம் தேதி அன்வார் மீது நடத்தப்பட்ட மருத்துவச் சோதனை மீது அவர் சாட்சியமளித்ததால் பிரதிவாதித் தரப்பு விசாரணை ரகசியமாக நடத்தப்பட வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டது.

ஜெயேந்திரன் சாட்சியம் 20 நிமிடங்களுக்கு நீடித்தது. அப்போது பொது மக்கள் நீதிமன்றத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். அவர் அரசு தரப்புக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவரை பிரதிவாதித் தரப்பு குறுக்கு விசாரணை செய்தது.