பிலிப்பைன்ளில் ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி விநியோகங்களை விரைவு படுத்துவதற்காக லெய்தே தீவுக்கு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் வந்தடைந்துள்ளது.
உணவு, நீர் மற்றும் மருந்துகளை தேவையான இடங்களுக்கு விநியோகிப்பதற்கான ஹெலிக்காப்டர்களின் நடவடிக்கைக்கான பெரிய மிதக்கும் தளமாக இது செயற்படும்.
கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தனது இயந்திரத்தைப் பயன்படுத்தி அது, தானே சுத்தமான குடிநீரையும் தரும்.
21 ஹெலிக்காப்டர்களுடன், ஜார்ஜ் வாசிங்டன் கப்பல் மேலும் சில அமெரிக்க கப்பல்களுடன் சேர்ந்து பிலிப்பைன்ஸ் உதவி நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க கடற்படைப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
வெளியேற முயலும் மக்கள்
பிலிப்பைன்ஸில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட டாக்லோபான் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற முயன்று கொண்டிருக்கிறார்கள்.
விமானங்களின் மூலம் வெளியேறி விடலாம் என்ற நம்பிக்கையில், நகரின் விமான நிலையத்துக்கு செல்லும் சாலை நெடுகிலும் மக்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
நகரின் துறைமுகத்தில், கப்பல் மூலம் சென்றுவிடலாம் என்று மேலும் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வரும் சனிக்கிழமை வரையிலாவது, அதாவது புயல் தாக்கி ஒரு வார காலத்துக்கும் மேல்வரை, சில பகுதிகளுக்கு தன்னால் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாது என்று ” சேவ் தி சில்ட்ரன்” என்ற தன்னார்வ அமைப்பு கூறுகிறது.
மக்கள் சாப்பிட உணவைத் தேடுகையில், பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துவருவதாக டக்லோபானில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
அங்கே இப்போது இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.
சீன உதவி அதிகரிப்பு
முன்னதாக, சீனாவால் பிலிப்பைன்ஸ் நிவாரண நிதிக்காக கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் டாலர்கள் மிகவும் குறைவானது என்று விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த நாடு மேலும் 16 லட்சம் டாலர்களை வழங்க முன்வந்துள்ளது.
கூடாரங்களும், போர்வைகளுமாக சீனா வழங்குகின்ற இந்த புதிய நிதி உதவிகூட, ஏனைய பல சிறிய அண்டை நாடுகள் வழங்கும் நிதியை விட மிகவும் குறைவு என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
தென்சீனக் கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே பிராந்திய முறுகல் மோசமடைந்து காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. -BBC