அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் வெட்டு குறித்து அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் சக் ஹேகல் கவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செலவு குறைப்பால் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச இராணுவ செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு எதிர்பாராத அச்சறுத்தலுக்கு முகம் கொடுப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மீது ஒரு தசாப்தத்தில் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் செலவு குறைப்பு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை மிக ஆழமானதும் சடுதியானதுமாக உள்ளதென கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் ஹேகல் எச்சரித்துள்ளார்.
“இது பொறுப்பற்ற செயற்பாடாகும். இதன் மூலம் பாதுகாப்பு தரப்பை மிக மோசமான தேர்வுக்கு நிர்ப்பந்திக்கிறது” என்றார்.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் 2014 நிதியாண்டின் 52 பில்லியன் டொலரில் இந்த பட்ஜெட் வெட்டின் கீழ் 10 வீதமானது தானாகக் குறைக்கப்படுகிறது.
இதனால் சர்வதேச அளவில் தரித்துவைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படையில் ஏற்கனவே 10 வீத வீழ்ச்சி கண்டுள்ளது. அதே போன்று இராணுவத்தின் பயிற்சி செயற்பாடுகள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதோடு விமானப்படையினரின் 25 வீதமான பயிற்சி செயற்பாடுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
“இந்த செயற்பாடு நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். கள செயற்பாடுகளுக்கு அனுப்பப்படாத வீரர்களுக்கான பயிற்சிகள் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்டால் அந்த தாமதத்தை சரிசெய்ய பல ஆண்டுகள் எடுக்க வேண்டிவரும்” என்றும் ஹேகல் எச்சரித்தார்.
2001 செப்டெம்பர் தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க இராணுவம் கடந்த ஒரு தசாப்தமாக ஈராக் மற்றும் ஆப்கானில் மேற்கொண்ட படை நடவடிக்கை முடிவடையும் தறுவாயி லேயே இந்த பட்ஜெட் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த செலவு குறைப்பை நிறுத்துவதற்கான உடன்பாடு எட்டப்படாவிட்டால் அமெரிக்கா மற்றொரு எதிர்பராத பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு தயாராக முடியாது இருக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் ஹேகல் விபரித்தார்.